அறிவு உற்று ஆகையின்,
அலர்ச் செங்கை எழீஇ,
செறிவு உற்று ஆசையின் தெய்வம் ஏற்றி, வில்
நெறிவு உற்றுஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன்,
வறிது உற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன். |
வீணானதை விரும்பும்
இயல்புள்ள உடலுக்கு மேலாக உயர்ந்து நின்ற
மாட்சியுள்ள அச்சிறுவன், அறிவு விவரம் அடைந்தது முதற்கொண்டு, தாமரை
மலர் போன்ற தனது சிவந்த கைகளைத் தலைக்கு மேல் எழுப்பி, உள்ளமும்
உடலும் ஒரு வழியாய்ச் செறியக் கொண்டு ஆசையோடு கடவுளைப் போற்றி,
வில்லின் தன்மை போல் வளைந்து ஒளி நிறைந்த தன் நெற்றி நிலத்தோடு
பதியத் தாழ்ந்து வணங்கினான்.
5
|
இரவி
காண்மரை யிகல வாய் மலர்ந்
தருவி மான்றுதி யறைந்து கும்பிட
மருவி யோங்குசெங் கரங்கண் மாலையிற்
பருதி போய்க்குவி பதும மானுமே. |
|
இரவி
காண் மரை இகல வாய் மலர்ந்து,
அருவி மான் துதி அறைந்து, கும்பிட
மருவி ஓங்கு செங்கரங்கள் மாலையில்
பருதி போய்க் குவி பதுமம் மானுமே. |
அவன் கதிரவனைக்
கண்ட தாமரை மலர் போலத் தன் வாயைத்
திறந்து, அருவி போலத் துதிகளைச் சொல்வான். அவன் கும்பிடவென்று
கூடி உயர்த்திய செந்நிறக் கைகள் மாலையில் கதிரவன் மறைந்து
போகவும் குவியும் தாமரை மலரை ஒத்திருக்கும்.
'மரை' - 'தாமரை' என்ற சொல்லின் முதற்குறை.
தாமரை மலர்
விரிவதையும் குவிவதையும் முனிவர் மற்ற இடங்களிலும்
உவமையாக்குகிறார்: 4. 18 - 19; 6. 16. முனிவரின் கித்தேரியம்மாள்
அம்மானையும் 'காலைக் கமலமெனாக் கர்த்தர் புகழ் வாய்மலர,
மாலைக்கமலமெனா வந்தடியிற் கைகுவிய (3. 6) என்று கூறுவது காண்க.
நளவெண்பாவில் 'பூகரர்தம் கைம் மலரும் பூங்குமுதமும் முகிழ்ப்பக்,
காசினியும் தாமரையும் கண் விழிப்ப' (1. 125) என்று வருதல்
நினைவுகூரத் தக்கது.
|