6
|
தூநி
லாவுசெஞ் சுடரு மீன்களும்
வானு லாவுடு நடுவ ழங்கிய
பானி லாவையும் பார்த்து நாதனைத்
தேனு லாவுரை செப்பி வாழ்த்துவான். |
|
தூ
நிலாவு செஞ் சுடரும், மீன்களும்,
வான் உலாவு உடு நடு வழங்கிய
பால் நிலாவையும் பார்த்து, நாதனைத்
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான். |
தூய்மை நிலவிய
கதிரவனையும், விண்மீன்களையும், வானத்தில்
உலாவும் விண்மீன்களின் நடுவே அமைந்துள்ள பால் போன்ற நிலாவையும்
பார்த்து, அவற்றையெல்லாம் படைத்த ஆண்டவனைத் தேனின் இனிமை
பொருந்திய சொற்களைச் சொல்லி வாழ்த்துவான்.
7 |
முலைக
ளாமென மலைமு டிக்குமே
வலைகொள் பாலென வருவி விஞ்சிவெண்
கலைக ளாமெனக் கடலிற் சிந்திய
நிலைகொள் மாதென நிலங்கண் டோங்குவான். |
|
முலைகள்
ஆம் என மலை, முடிக்கு மேல்
அலை கொள் பால் என அருவி, விஞ்சி வெண்
கலைகள் ஆம் என அக் கடலில் சிந்திய
நிலை கொள் மாது என நிலம் கண்டு, ஓங்குவான். |
மண்ணுலகத்தைக்
கூர்ந்து நோக்கி, மலைகள் முலைகள் ஆகும்
என்றும், அவற்றின் முடியாகிய சிகரத்திற்கு மேலிருந்து பாயும் அருவி
அலைகொண்ட பால் என்றும், அப்பால் மிஞ்சி வெண்ணாடைகள் என்று
சொல்லத் தக்க கடலில் சிந்திய நிலையுள்ள ஒரு பெண்ணே நிலம்
எனவும் ஒப்பிட்டு எழுச்சி கொள்வான்.
மாது
- பெண்: நிலத்தை நிலமகள் எனவும் பூமாதேவி எனவும்
கூறுதல் மரபு. |