8 |
சோலை
வாயிறால் துளித்த தேறலு
மாலை வாய்மலர் வழித்த தேறலு
மாலை வாய்க்கழை யளித்த தேறலு
நூலை யாய்ந்தென நுதலி மூழ்குவான். |
|
சோலை
வாய் இறால் துளித்த தேறலும்,
மாலை வாய் மலர் வழித்த தேறலும்,
ஆலை வாய்க் கழை அளித்த தேறலும்,
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான். |
சோலையில்
தேனடையினின்று சொட்டிய தேனும், மாலையினின்று
மலர் வழிய விட்ட தேனும், ஆலையில் கரும்பு பிழியத் தந்த சாறாகிய
தேனும் பற்றி, நூலை ஆராய்ந்து நுண்பொருள் காண்பதுபோல் கருதிப்
பார்த்து இன்பத்தில் மூழ்குவான்.
இங்கு இன்பமாவது,
இவற்றில் தேனை அமைத்துத் தந்த இறைவனின்
திருவருட் கருணையை வியந்து போற்றுதல்.
9 |
நிழலின்
மேதிகள் நீரிற் சங்குகள்
பொழிலி றோகைகள் பூவில் வண்டுகள்
கழனி யோதிமந் துயிலக் கண்டுவாழ்
குழவி வாய்நலந் துயில்கொள் வாமரோ. |
|
நிழலில்
மேதிகள், நீரில் சங்குகள்,
பொழிலில் தோகைகள், பூவில் வண்டுகள்,
கழனி ஓதிமம் துயிலக் கண்டு வாழ்
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ. |
நிழலில் எருமைகளும்,
நீரில் சங்குகளும், சோலையில் மயில்களும்,
பூவில் வண்டுகளும், வயலில் அன்னங்களும் துயிலக் கண்டு இன்பமாய்
வாழும் அக்குழந்தையினிடம் எல்லா நலங்களும் தங்கித் துயில் கொள்வன
ஆகும்.
'அரோ' அசைநிலை.
தோகை - தோகை கொண்ட மயிலுக்கு ஆகு
பெயர்.
|