பக்கம் எண் :

முதற் காண்டம்144

              12            
மூக்கிற் றாக்கிய முயல்மெய் தாக்கிய
நாக்கிற் றாக்கிய செவிநள் தாக்கிய
நோக்கிற் றாக்கிய நுனையின் பின்னவாய்த்
தூக்கிற் றாக்கிய நயன்சொல் வாகுமோ.
 
மூக்கில் தாக்கிய, முயல் மெய் தாக்கிய,
நாக்கில் தாக்கிய, செவி நள் தாக்கிய,
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய்த்
தூக்கில், தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ?

     மூக்கில் வந்து படுவதாகிய மணமும், உழைக்கும் மெய்யில் வந்து
படுவதாகிய ஊறும், நாவில் வந்து படுவதாகிய சுவையும், செவியின் நடுவில்
வந்து படுவதாகிய ஓசையும், கண்ணில் வந்து படுவதாகிய ஒளியும் ஆக
இவ்வாறு வந்து சேரும் நுட்பமான இன்பங்களை இத்தகையனவென்று
ஆராயத் தொடங்கினால், அதனால் வந்து சேரக்கூடிய இன்பத்தை
எடுத்துக் கூறுதல் இயலுமோ?

     "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின், வகை தெரிவான்
கட்டே உலகு" என்ற குறள் (27) இங்கு நினைக்கத் தக்கது. 'தூக்குதல்'
என்றது, காட்டிய குறளில் 'வகை தெரிதல்' என்றதுபோல, அவற்றின்
நலமும் தீங்கும் ஆராய்ந்து, நல்லது கொண்டு அல்லது விடுதல்.
 
            13           
மீது லாவிய மீன்க டீபமாய்ப்
போது லாவிய புவியும் வீதியாய்க்
கோது லாவிய குறைகொய் காட்சியான்
மூது லாவிறை யடைய முன்னினான்.
 
மீது உலாவிய மீன்கள் தீபமாய்,
போது உலாவிய புவியும் வீதியாய்,
கோது உலாவிய குறைகொய் காட்சியான்,
மூது உலாவு இறை அடைய முன்னினான்.

     குற்றத்தோடு பொருந்திய குறைகளைக் கொய்து களையும் அறிவு
படைத்த சூசை, வானத்தின்மீது சஞ்சரித்த விண்மீன்களை விளக்காகவும்,
மலர்கள் பரந்த பூமியை வீதியாகவும் கொண்டு, பழமைக்கெல்லாம்
பழமையாய் நிலவும் இறைவனை அடைய முற்பட்டான்.