பக்கம் எண் :

முதற் காண்டம்148

               19            
விதிமு கத்தலர் மேதையின் மேன்மையான்
புதிமு கத்தலர் பூவணிச் சாயலார்
நிதிமு கத்தெதிர் மூடிய நீண்டகண்
மதிமு கத்தெதிர் தாமரை மானுமே.
 
விதி முகத்து அலர் மேதையின் மேன்மையான்,
புதி முகத்து அலர் பூ அணிச் சாயலார்
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண்,
மதி முகத்து எதிர் தாமரை மானுமே.

     ஒழுக்க விதிகளிடத்துப் பரந்த அறிவின் உயர்வு கொண்டுள்ள சூசை,
புதிதாய் மலர்ந்த பூக்களால் தொடுத்த மாலை போன்ற சாயல் கொண்டுள்ள
மகளிர் தம் பொன்மயமான முகத்தின் எதிரே மூடிக்கொண்ட நீண்ட
கண்கள், மதியின் முன்னால் எதிர்ப்பட்டு மூடிக்கொள்ளும் தாமரை மலரை
ஒத்திருக்கும்.

 
             20         
கானி றைஞ்சிய நற்றவக் காவலன்
மீனி றைஞ்சிய மின்விழி யாருரை
யூனி றைஞ்சிய வேலென வோர்ந்துதான்
றேனி றைஞ்சிய தீஞ்சொலைக் கேட்கிலான்.
 
கான் இறைஞ்சிய நல் தவக் காவலன்,
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை,
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து, தான்
தேன் இறைஞ்சிய தீம் சொலைக் கேட்கு இலான்.

     காடு வணங்கத்தக்க நல்ல தவத்துக்குக் காவலனாகிய சூசை,
விண்மீனும் வணங்கத்தக்க மின்னல் போன்ற கண்களை உடைய மகளிர்தம்
சொல், ஊன் படிந்துள்ள வேலுக்கு நிகரென்று உணர்ந்து, தேனும்
வணங்கத்தக்க அவர்தம் இனிய சொல்லைக் கேட்கமாட்டான்.