பக்கம் எண் :

முதற் காண்டம்149

               21           
கார்மு கத்துவ ளைத்தன கார்முகஞ்
சீர்மு கத்துச்செ யந்தருங் காமவெம்
போர்மு கத்துவெல் வான்புரை யாசையற்
றேர்மு கத்தெதி ராதொளித் தானென்றான்.
 
"கார் முகத்து வளைத்தன கார்முகம்
சீர் முகத்துச் செயம் தரும். காம வெம்
போர் முகத்து வெல்வான், புரை ஆசை அற்று,
ஏர் முகத்து எதிராது ஒளித்தான்." என்றான்.

     "வில்லுக்கு எதிராக வளைத்து எதிர்த்து நின்ற வில்லே சிறந்த
முறையில் வெற்றியைப் பெற்றுத்தரும். கொடிய காமப் போரிலோ,
குற்றமுள்ள ஆசை உள்ளத்தில் அறப்பெற்று, மாதர்தம் அழகிய
முகத்திற்கு எதிரே நில்லாது ஓடி ஒளித்தவன் வெல்வான்" என்று
தனக்குள் சொல்லிக்கொண்டான்.

     இயேசு சமையினரின் பயிற்சிக் காலத்தில் பயன்படும் 'புண்ணிய
சாங்கோபாங்க முயற்சி' என்ற நூல் (அல்போன்சு ரொதிரிகெஸ் அடிகளார்
சே. ச. எழுதியது), காமச் சோதனைகளைப் பற்றி விரித்துரைக்கும் பொழுது,
"இந்தப் பாவத்தினின்று ஓடுவதால்தான் அதோடு அச்சமின்றிப்
போராடலாம்." (12ஆம் போதகம், சோதனைகளின் பேரில்) என்று கூறுகிறது.

     இந்நூலை முனிவர் பயன்படுத்தியிருக்கலாம். இந்நான்கு
பாடல்களாலும் காமத்தை வெல்வதற்குரிய மனவடக்கம் (17), கண்ணடக்கம்
(19) செவியடக்கம் (20) இடத்து நீக்கம் (21) கூறப்பட்டன. இவற்றுள் எது
தளரினும் வீழ்ச்சிக்கு இடமாகுமென்று கொள்க.
 
              22              
என்றொ ளித்தெனக் கானுற வேகினான்
குன்றொ ளித்த குருமணிச் சாயலான்
கன்றொ ளித்த கறவைக னைந்தென
வன்றொ ளித்தவற் கார்த்தழ யாருமே.