பக்கம் எண் :

முதற் காண்டம்155

"வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினைப் பகைக்கு அஞ்சி, ஓடி
நாடு இழந்து ஒளித்து, கானில் நயந்து உறை அறத்தை நாடி,
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி,
தோடு இழந்து ஏகுது." என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன்

     ஒப்பற்று உயர்ந்த அச் சிறுவன், "வான் வீட்டை இழந்து மனிதர்மீது
பகை கொண்டுள்ள பேய்கள் கூட்டும் பாவ வினையாகிய பகைக்கு அஞ்சி,
நாட்டை வீட்டு ஓடி ஒளித்து, காட்டில் விரும்பித் தங்கிச் செய்யும்
துறவறத்தை நாடி, ஒப்பற்று உயர்ந்த மலையினிடத்து ஒளிந்துகொள்ள
நினைந்து, கூட்டத்தைப் பிரிந்து நான் போகின்றேன்" என்றான்.
 
                      30   
கார்முகத் தலரு முல்லை கடிமுகத் திமைக்கும் வண்கா
லூர்முகத் தஞ்சு நாவா யுடைத்திருக் கொணருங் கொல்லோ
போர்முகத் தெதிரா நீங்கிற் புணருமோ விழைந்த வெற்றி
யேர்முகத் துணர்விற் றேர்ந்த விளவலோ யென்றான் மூத்தோன்.
 
"கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண்கால்
ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடைத் திருக் கொணரும் கொல்லோ?
போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி,
ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய்? என்றான்" மூத்தோன்.

     முதியவன் அவனை நோக்கி, "அழகிய முகத்தோடு அறிவிலும் தேர்ந்த
சிறுவனே, இடியோடு கூடிய கார் காலத்தில் மலரும் முல்லை தன்னிடத்து
வாசனை மிகக் கொண்டு விளங்கும். வளமான காற்று வீசும் இடத்திற்கு
அஞ்சிய கப்பல் பிற நாட்டிலுள்ள செல்வத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டு
வரமோ? போர்க் களத்தில் பகைவரை எதிரேற்காமல் நீங்கினால் விரும்பிய
வெற்றி கிட்டுமோ?" என்றான்.

     வண் கால் - வளமான காற்று: புயற் காற்று. 'கொணருங் கொல்லோ'
என்ற விடத்துக் 'கொல்' அசைநிலை.