பக்கம் எண் :

முதற் காண்டம்160

"பெற்று அறம் அணிந்த நல்லோய், பிறர் மனை விளைத்த செந்தீ
அற்று அற ஓடித் தன் வீடு அழன்றதே போல, வேட்கைப்
பற்று அற உணர்த்தி, உள்ளம் பற்றிய நசையில் வெந்தால்,
இற்று அற உறுதி என்னோ?" என்றனன் அரிய சூசை.

     அரிய சூசை, "புண்ணியத்தை அணிகலனாய்ப் பெற்று அணிந்த
நல்லவனே, பிறர் வீட்டில் யாரோ விளைவித்த செந்நிற நெருப்பு அடியோடு
அறுமாறு அணைக்க வென்று ஓடித் தன் வீடு எரிந்த கதையே போல,
ஆசைப் பற்று அறுமாறு பிறர்க்கு உணர்த்தப் போய், அதன் மூலம் தன்
உள்ளம் நெருப்பாய்ப் பற்றிய ஆசையில் வேக நேர்ந்தால், இத்தகைய நிலை
நீங்குவதற்கு உறுதி யாதோ?" என்றான்.

                     38
தீதிலா விடமே வேண்டிற் சேணுல கெய்தல் வேண்டுங்
கோதிலா வனத்துந் தன்னைக் கொணர்ந்தகால் விளையும்
                                      வெம்போ
ரேதிலா தொழுக லுள்ளத் தியல்பினா லாகு மன்றி
வாதிலா விடத்தா லாகா மைந்தனே யென்றான் சான்றோன்.
 
"தீது இலா இடமே வேண்டின், சேண் உலகு எய்தல் வேண்டும்.
கோது இலா வனத்தும் தன்னைக் கொணர்ந்த கால், விளையும்                                           வெம்போர்.
ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி,
வாது இலா இடத்தால் ஆகா, மைந்தனே!" என்றான் சான்றோன்.

     மூத்தோன், "மகனே, தீது இல்லாத இடமே வேண்டுமாயின்,
வானுலகையே அடைய வேண்டும். குற்றமில்லாத வனத்தில் தன்னைக்
கொணர்ந்த போதும், அங்கும் கொடிய சோதனைப் போர் விளையும்.
குற்றமில்லாது நடத்தல் என்பது உள்ளத்தின் இயல்பினால்
ஆகுமேயல்லாமல், போராட்டம் இல்லாத நிலை இடத்தால் ஆகாது",
என்றான்.

     'வனத்தும்' என்ற சொல்லின் 'உம்' பிரித்து, 'கால்' என்பதனோடு
கூட்டப்பட்டது. 'ஆகாது' என்ற சொல்லின் இறுதி கெட்டது.