பக்கம் எண் :

முதற் காண்டம்165

"நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்தபின்னர்,
ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது,
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ, வினை அறும் இறையோய்?"
என்ன ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான்.

     "தீவினை அற்ற ஆண்டவனே, நீதி முறையும் அதனைக்
கடைப்பிடிக்கும் நெறி முறையும் இவ்வானவன் மூலம் சொன்ன வாழ்க்கை
நிலையுமாகிய எல்லாம் உணர்ந்த பின்னர், எல்லாவற்றிற்கும் தொடக்கமும்
முடிவுமாகிய உன் அடியே அல்லாது, எனக்கு வேறு வழியும் ஒன்று
உண்டோ?" என்று கூறி, அறிவும் அதனைச் செயலாற்றும் வலிமையும்
பெருகக் கொண்டு, சூசை முன் பிறர் அறியாமல் விட்டு வந்த தன்
நகரத்திற்கே போய்ச் சேர்ந்தான்.
 
                      46
கார்வளர் மின்னின் மின்னிக் கதிர்வளர் பசும்பொன் னிஞ்சி
வார்வளர் முரச மார்ப்ப மணிவளர் நகரம் வில்செய்
தேர்வளர் பருதி யொத்தான் சென்றுபுக் குவப்ப யாரும்
பார்வளர் திலக மொத்தான் பழிப்பற விளங்கி னானே
.
 
கார் வளர் மின்னின் மின்னிக் கதிர் வளர் பசும் பொன் இஞ்சி
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம், வில் செய்
தேர் வளர் பருதி ஒத்தான், சென்று புக்கு உவப்ப யாரும்,
பார் வளர் திலகம் ஒத்தான், பழிப்பு அற விளங்கினானே.

     ஒளியைச் செய்யும் தேரில் வரும் பகலவனை ஒத்தவனாகிய சூசை,
கருமேகத்தில் தோன்றும் மின்னலைப்போல மின்னிக் கதிரொளி பரப்பும்
பசும்பொன் மதில் சூழ்ந்து, வாரால் கட்டப்பட்ட முரசு ஒலிக்க, மணிகள்
பெருக வளர்ந்த எருசலேம் நகருக்குள் எல்லோரும் மகிழச் சென்று புகுந்து,
நிலமகளின் நெற்றியிற் பொருந்திய திலகம் போன்றவனாய், எவ்வகைப்
பழிப்பிற்கும் இடமின்றி விளங்கினான்.