பக்கம் எண் :

முதற் காண்டம்166

                  இல்லத்து இருத்திய தவம்

     -மா, -மா, கூவிளம், தேமா, புளிமாங்காய்
 
                47
மீனார் வானம் பெற்றவ னோதி விதிபெற்றுத்
தேனார் கானம் பெற்றதி ருந்துந் தெளிவாறா
தூனார் காயம் பெற்றிவ னுவ்வோ டுயர்மற்ற
வானார் மானம் பெற்றற மொன்றாய் வனைகின்றான்.
 
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓதி விதி பெற்று,
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது,
ஊன் ஆர் காயம் பெற்று இவன், உவ்வோன், உயர் மற்ற
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான்.  

     விண்மீன்கள் நிறைந்த வானத்தைத் தன் இடமாகப் பெற்றுள்ள
வானவன் தந்த அறிவுரையால் விதிமுறைகள் தெரியப் பெற்று, தேன்
நிறைந்த கானகத்தில் தானாகப் பெற்றுக் கொண்ட திருந்திய ஞானத்தின்
தெளிவு மாறாத் தன்மையாய், இவன் ஊனோடு கூடிய உடலைப்
பெற்றிருந்தும் தவத்தோடு மற்ற உயர் வானுலகில் நிறைந்துள்ள
பெருமைகளையும் பெற்று, அறம் ஒன்றே செய்கின்றான்.

 
                     48
வானங் கொண்டார் மாணருள் கொள்வா னவர்கொண்ட
ஞானங் கொண்டா னில்லவ னில்லோர் நகைகொள்வான்
றானங் கொண்டான் மாசில தூயோன் றவங்கொண்டா
னீனங் கொண்டா ருள்வலி கொள்வா னிவை கொண்டான்.
 
வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான், அவர் கொண்ட
ஞானம் கொண்டான்; இல்லவன், இல்லோர் நகை கொள்வான்,
தானம் கொண்டான்; மாசு இல தூயோன் தவம் கொண்டான்.
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான், இவை கொண்டான்.