பக்கம் எண் :

முதற் காண்டம்168

வேய்ந்து ஆர்ந்து ஒன்றும் வான் பொருள் விஞ்ச, விழைவோடு ஒன்று
ஈய்ந்தால், ஒன்றே கோடி பயக்கும் எனில், அன்பால்
வாய்ந்தான், ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல்
ஆய்ந்தால், ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ?

     தன்னை அழகு செய்தாற்போல் நிறைந்து பொருந்தும் சிறந்த பொருள்
மிஞ்சிக் கிடக்க, ஒருவன் விருப்பத்தோடு ஒன்றை எளியவர்க்கு ஈந்தால்,
அவ்வொன்றே அவனுக்குக் கோடியாகப் பயன் தருமென்றால்,
அன்புவாய்ந்தவனாகிய சூசை, தன்னிடம் பொருந்தியுள்ள வறுமைக்கு
மிஞ்சிய தன்மையாய் ஈதலை ஆராய்ந்து பார்த்தால், அவனுக்கு வந்து
பொருந்தும் சிறந்த புகழை அளந்து கூறுதல் அரியது அன்றோ?

     'கோடி பயக்கும்' என்றது, கோடிப் புண்ணியம் பயக்கும் எனவும்,
'இறைத்த கிணறே ஊறும்' என்பதுபோல், கொடுத்த ஒன்று கோடியாய்ப்
பெருகுமென்றும் கொள்ளக் கிடந்தது.
 
                   51
மெய்யாற் குன்றா தொண்டவ மாறா வினையாண்மை
கையாற் குன்றா வண்கொடை யோடுட் களிகூர்ந்து
பொய்யாற் குன்றா நெஞ்சரு வல்லோன் புணர்வாக்க
மையாற் குன்றா வெம்வன மேகா மனை நின்றான்.
 
மெய்யால் குன்றாது, ஒண் தவம் மாறா வினை ஆண்மை
கையால் குன்றா வண் கொடையோடு, உள் களிகூர்ந்து,
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன், புணர்வு
ஆக்க, மையால் குன்றா வெம் வனம் ஏகா, மனை நின்றான்.  

     உள்ளம் களிகூர்ந்து, பொய்யால் குன்றுதல் இல்லாத தன் நெஞ்சில்
அரிய வல்லமை கொண்டுள்ள சூசை, மெய்மை நெறி பிறழாமல், ஒள்ளிய
தவத்தினின்று மாறாத வகையில் தொழிலை ஆளும் தன்மையைக் கையால்
குறைபடாத வளமான கொடையோடு இணைத்து நடத்துமாறு, இருள்
குறைதலில்லாத கொடிய வனத்திற்கச் செல்லாமல், வீட்டிலே
நிலைகொண்டான்.