பக்கம் எண் :

முதற் காண்டம்172

மனத்தெளிவு அடைந்து, பன்னிரண்டே என்னும் வயது உடையவனாகிய
சூசை, "இன்பம் என்ற பெயரால் துன்பமே விளையும் வழி எனப்படும்
திருமணம் என்றும் செய்து கொள்ளேன்" என்று உறுதிபூண்டான்.

             அற வாழ்வும் அறத் துணைமையும்

     -மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
 
              57
உடல்கி டந்துட லங்கடந் தானெனா
மிடல்கி டந்துயர் வீடுள வின்பது
கடல்கி டந்துக னிந்தக ளிப்புறீஇ
மடல்கி டந்தகள் வார்மலர் மானுவான்.
 
உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து, உயர் வீடு உள இன்பு அது
கடல் கிடந்து, கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான்.  

     உடலுக்குள்ளே கிடந்தும் உடலைக் கடந்தவன்போல, வல்லமை
பொருந்திக் கிடந்து, உயர்ந்த வீட்டுலகிலுள்ள இன்பமாகிய கடலில்
மூழ்கிக்கிடந்து, இன்பம் கனிந்த மகிழ்ச்சிபூண்டு இதழ்களிடையே கிடந்த
தேனைப்பொழியும் மலரை ஒத்திருப்பான் சூசை.
 
              58
கலையுற் றுள்ளிரு ணீங்கிய காட்சியா
னலையுற் றிப்பொரு ளோடலை யாதுள
நிலையுற் றெந்தைநெ ருங்கடி சேர்ந்துயர்
மலையுற் றானென மாறுப டானரோ.
 
கலை உற்று, உள் இருள் நீங்கிய காட்சியான்
அலை உற்று இப் பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று, எந்தை நெருங்கு அடி சேர்ந்து, உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ.  

     கல்வியைப் பெற்று, அதன் மூலம் மனஇருள் நீங்கிய
அறிவுடையோனாகிய அவன், உள்ளம் அலைக்கப்பட்டு இவ்வுலகப்
பொருள்களை நாடி அலையாமல் நிலைபெற்று, எம் தந்தையாகிய
ஆண்டவனின் நெருங்கிய பாதங்களைச் சரணாகச் சென்று சேர்ந்து,
உயர்ந்த மலையின் நிலையை அடைந்தவன்போல் மாறுபடாதிருப்பான்.