பக்கம் எண் :

முதற் காண்டம்175

பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால்
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான்
அருள் கடிந்த அசடரை நோக்க லோடு
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான்.

     பொருளாசையை விலக்கி ஐம்புலன்களையும் அடக்கியாள்வதனால்
மயக்கமெல்லாம் விலக்கிய மனத்தோடு தெளிந்த அறிவு கொண்ட சூசை,
பொருளாசை காரணமாகக் கருணையைத் தம்மிடமிருந்து விலக்கிக் கொண்ட
தீயவரைத் தன் பார்வையாலேயே இருளை விலக்கக் கூடிய இரக்கங்
கொண்டு ஏங்குவான்.

     பொருளாசை பிறர் பொருளைக் கவர்தலும் தன் பொருளை
ஈயாமையுமாகிய இரு வகையாலும் அருளைக் கெடுக்கும்.
 
              64
தவர்க்கு மூங்கரி தாந்தயை தாங்குளத்
துவர்க்கும் வேலையுடுத்தன பாருறை
யெவர்க்கு நன்றியி யற்றியின் னாசெயு
மவர்க்கும் வாய்ந்தவ றத்துணை யாயினான்.
 
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து,
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை
எவர்க்கும் நன்றி இயற்றி, இன்னா செயும்
அவர்க்கும் வாய்ந்த அறத் துணை ஆயினான்.  

     தவத்தோர்க்கும் மிக அரிதான இரக்கத்தைத் தாங்கிய உள்ளத்தோடு,
உவர் கொண்ட கடலை ஆடையாக உடுத்துள்ள உலகில் வாழும்
யாவருக்கும் நன்மை செய்து, தனக்குத் துன்பம் செய்பவருக்கும் பொருந்திய
அறத் துணையாய் அமைந்தான்.

     பிறர் தரும் துன்பத்தைப் பொறுமையாய்த் தாங்குதலால், அவர்
நன்னெறிப்பட நடத்தி, இவ்வாறு அறத்துணை ஆயினான். இதனை விளக்கும்
நிகழ்ச்சி 29ஆவது வேதக் கெழுமைப் படலம், 109-120 பாடல்களிற் காண்க.

 
             65
அன்பு வாய்ந்தவு யிர்நிலை யஃதிலார்க்
கென்பு தோலுடல் போர்த்ததென் றன்புை
யின்பு தோந்தநி லையெனத் தானிவண்
டுன்பு காய்ந்தவு யிர்த்துணை யாயினான்.