பக்கம் எண் :

முதற் காண்டம்176

'அன்பு வாய்ந்த உயிர் நிலை; அஃது இலார்க்கு
என்பு தோல் உடல் போர்த்தது', என்று, அன்பு உறை
இன்பு தோய்ந்த நிலை என, தான் இவண்
துன்பு காய்ந்த உயிர்த்துணை ஆயினான்.

     'ஒருவர்க்கு வாய்ந்த உயிர் உடலில் நிலைத்திருப்பதன் அடையாளம்
அவ்வுயிர் காட்டும் அன்பேயாகும்; அவ்வன்பு இல்லாதவர்க்கு அவ்வுடல்
எலும்பின்மீது தோலைப் போர்த்திய பொதியே ஆகும்', என்று சூசை
உணர்ந்து, அன்பு தங்கும் இன்பம் தோய்ந்த நிலையம் போல, இவ்வுலகில்
துன்பத்தால் வாடிய உயிர்களுக்கெல்லாம் தானே உறுதுணை ஆனான்.

     "அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு, என்பு தோல்
போர்த்த உடம்பு". என்ற குறளுக்கு (80) விளக்கவுரை போல் இப்பாடல்
அமைந்துள்ளமை காண்க.
 
               66
பொறைய தாண்மையி னோடெரி பூணெனா
மறைய தாட்சிய ணிந்தவ ளன்றகும்
நிறைய மாட்சிநி கர்ப்பது நூல்வழி
யறைய வாய்மைய ரெய்துப வாண்மையோ.
 
பொறையது ஆண்மையினோடு, எரி பூண் எனா
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும்
நிறைய மாட்சி நிகர்ப்பது, நூல் வழி
அறைய வாய் மையர் எய்துப ஆண்மையோ?  

     பொறுமையை ஆளுந் தன்மையோடு, ஒளி தரும் அணிகலன் போல்
வேதத்தின் ஆட்சியை அணிந்துள்ள வளனுக்குப் பொருந்தும் நிறைவான
மாட்சிக்கு ஏற்பப் புகழ, ஒரு நூலின் வழியாக எடுத்துக் கூறச் சொல்வன்மை
படைத்த புலவரும் திறம் படைத்தவர் ஆவரோ?

     'எய்துப ஆண்மையோ' என்பதனை, 'ஆண்மை எய்துபவோ' எனப் பிரித்துக் கூட்டுக.

                 பால மாட்சிப் படலம் முற்றும்.

              ஆகப் படலம் 4க்குப் பாடல்கள் 293.