பக்கம் எண் :

முதற் காண்டம்18

     செல்வமுள்ள அப்பெரிய மலையை வானுலகிற்கு எடுத்துச் செலுத்தக்
கருதி வானவர் விடுத்த வடம் போல் மழைத் தாரைகள் பாய்ந்து
கொண்டிருக்கும். பூமி வெள்ளியாலான நீண்ட சங்கிலிகளால் கட்டி அதை
விடாது பிடித்துக் கொண்டிருக்கும் தன்மையாய், அம்மலையைச் சுற்றிலும்
துள்ளி விழுந்த வண்ணம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அருவியின்
தோற்றம் அமையும். 'வான்' வானவருக்கு ஆகுபெயர்.
   
                       6
ஒண்ணு ரைத்தெரி யுமிழ்த்தவி ரினமணி வரன்றித்
தெண்ணு ரைத்தெழுந் திரைத்திரள் வயின்றொறும் புகுந்து
வண்ணு ரைத்தெதிர் வதிந்தெலாஞ் சாய்த்தவை கொடுப்போய்ப்
புண்ணு ரைத்தடக் கொள்ளைசெய் பொருந்தலர் போன்றே.
 
ஒள் நுரைத்து, எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி,
தெள் நுரைத்து எழும் திரைத் திரள், வயின் தொறும் புகுந்து,
வள் நுரைத்து, எதிர் வதிந்த எலாம் சாய்த்து, அவை கொடு போய்,
புண் நுரைத்து அடக் கொள்ளை செய் பொருந்தலர் போன்றே.

     தெளிந்த நுரையோடு எழுந்து பாயும் திரளான வெள்ளம் ஒளி
பொருந்திய நுரை போன்றும் நெருப்பைக் கக்குவனவாகவும் விளங்கும் பல
இனத்து இரத்தினங்களையெல்லாம் மலையினின்று வாரிக் கொண்டு, வழியில்
எவ்விடங்களிலும் நுழைத்து, தடைபட்ட இடங்களில் வலிமையோடு நுரை
பொங்க எழுந்து, தன் எதிரே தங்கியிருந்த எல்லாவற்றையும் சாய்த்து,
அவற்றையெல்லாம் தன்னோடு இழுத்துக் கொண்டு போயிற்று. அதனால்,
அவ்வெள்ளம் புண்ணினின்று நுரையோடு குருதி எழுமாறு கொன்று
கொள்ளையிடும் பகைவரைப் போன்று விளங்கியது.

    
ஒளி பொருந்திய நுரை போன்று விளங்குவன யானைக் கொம்பின்
முத்தும் வைரமும் வைடூரியமும் போன்ற வெண்ணிற மணிகள் எனவும்,
நெருப்பைக் கக்குவன செந்நிற மாணிக்கம் எனவும் கொள்க. 'அட' என்னும்
செயவெனச்சத்தை 'அட்டு' எனச் செய்தெனச்சமாகக் கொள்க. 'போன்றது'
எனற்பாலது 'போன்று' என விகாரமாயிற்று. பின்வரும் பாடல்களிலும்
'போன்றே' என்ற சொல்லுக்கு இதுவே இலக்கணமாய்க் கொள்க.