பக்கம் எண் :

முதற் காண்டம்19

                   7
விரைகி டந்தசை வீயுமிழ் மதுவினாற் பெருகி
நிரைகி டந்தெழுஞ் சோலையுங் கழனியு நிறைப்ப
வரைகி டந்திழி வளம்புன லெங்கணு முலவல்
திரைகி டந்துயர் சீர்த்துறுப் புலாவிய போன்றே.
 
விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருக,
நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப,
வரை கிடந்து இழி வளம் புனல், எங்கணும் உலவல்,
திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே.

     மலையினின்று பாய்ந்தோடிய வளமுள்ள வெள்ளம், வாசனை
பொருந்தி வெள்ளம் மோதுதலால் அசையும் மலர்கள் உமிழ்ந்த மதுவினால்
மேலும் பெருகி, வரிசையாகக் கிடந்து உயர்ந்து நிற்கும் சோலைகளையும்
தாழ்ந்து கிடக்கும் வயல்களையும் நிறைத்து, அவ்வாறு எங்கும் உலாவிப்
பரந்து நின்றது. அத்தோற்றம், நீரால் வரும் உயிர் பின் சிறந்து எழுந்து
உறுப்புக்களிலெல்லாம் உலாவிப் பரந்தது போன்று இருந்தது.

    
மலையினால் குறிஞ்சி நிலமும், சோலையினால் முல்லை நிலமும்,
கழனியால் மருத நிலமும் பெறப்படும். 'எழும் சோலை' எனவே, கழனி
தாழ்ந்தமை பெறப்படும்.
 
                    8
அஞ்சி லாவெதி ரடுக்கிய கல்லெலாங் கடந்தே
யெஞ்சி லாவெழி லிமைத்தநீண் மருதமு நீக்கித்
துஞ்சி லாநதி தொடர்ந்தகல் கருங்கட னோக்கல்
விஞ்சை யாரெல்லாம் வெறுத்துவீ டிவறிய போன்றே.
 
அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே,
எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி,
துஞ்சு இலா நதி, தொடர்ந்து அகல் கருங் கடல் நோக்கல்,
விஞ்சையார் எலாம் வெறுத்து, வீடு இவறிய போன்றே.

    ஓடுதல் ஓயாத ஆறு, தனக்கு எதிரே அடுக்காக நின்ற
குன்றுகளையெல்லாம் அஞ்சாமல் கடந்து வந்து, குறையில்லாத அழகுடன்
விளங்கிய மருத நிலத்தையும் நீக்கி, பரந்த கருங்கடலையே நோக்கித்
தொடர்ந்து செல்லும் காட்சி, அறிவுடையோர் இவ்வுலகிலுள்ள
எல்லாவற்றையும் வெறுத்து, மோட்சமொன்றையே நாடுதலை ஒத்திருந்தது.