பக்கம் எண் :

முதற் காண்டம்194

     "நானும் ஒரு பிள்ளையாக, மனித குலத்தில் ஒருவனாகச் சேர்ந்து
பிறந்து உலகத்தார் கொண்டுள்ள அழிவைப் போக்குமாறு, எனக்குத் தாயாக
எருசலேம் கோவிலில் வளரும் கன்னி மரியாள், தன் தாயின் வயிற்றில்
பழமையான ஆதிப் பாவப் பழியினால் மனிதர் அனைவர்க்கும் வந்து சேரும்
சன்மப் பாவம் என்னும் பிழை இல்லாமல் தோன்றி, தூய மனமும் அறிவும்
ஆண்மையும் தெளிந்த தெய்வக் காட்சியும் வல்லமையும் அருளும் மாண்பும்
துணிவும் ஆய்வுத் திறனும் அழியாத வரங்களாகப் பெற்றுக் கொண்டு,
எவ்வுலகமும் வியப்படையத் தோன்றி நின்றாள்."

     'அன்றோ' அசை நிலை. மரியாள் தன் பெற்றோரை இழந்து, எருசலேம்
கோவில் கன்னிமாடத்தில் தங்கி, கோவில் பணி புரிந்து வந்தாளென்று அறிக.
‘ஆகம்’ - ‘அகம்’ என்பதன் நீட்டல் விகாரம்.
 
                       28
காரணமா யேதறியா வையகத்தா ரினிதுளத்திற் களித்து
                                    மூழ்கி
வாரணமா யின்பெய்தத் தலைவியென வான்றளங்கள் வகுப்பு
                                    யாவும்
பூரணமாய்த் தொழுதுவப்பப் பூவனத்திற் பொருவின்றிப்
                            போர்த்த வெய்யோன்
பேரணியாய்ப் பிறைமிதித்து முடியொப்ப மீன்சூடிப் பிறந்து
                                    லேய்ந்தாள்."
 
"காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து
                                           மூழ்கி,
வாரணமாய் இன்பு எய்தத் தலைவி என வான் தளங்கள் வகுப்பு
                                           யாவும்
பூரணமாய்த் தொழுது உவப்ப, பூவனத்தில் பொருவு இன்றி
                                      பார்த்த வெய்யோன்.
பேர் அணியாய், பிறை மிதித்து, முடி ஒப்ப மீன் சூடிப் பிறந்து
                                           வேய்ந்தாள்."

     "உலக மக்கள் காரணமென்று எதுவும் அறிய கூடாமல் மனத்துள்
மகிழ்ச்சி கொண்டு இன்பத்தில் மூழ்கவும், வானவர் படையணிப் பிரிவுகள்
எல்லாம் கடல் போல் இன்பம் அடைந்து இவள் தம் தலைவி எனத்
தொழுது நிறைவான மகிழ்ச்சி கொள்ளவும், இவ்வுலகில் தனக்கு எவரும்
ஒப்பில்லாமல், கதிரவனே தன் உடலிற் போர்த்திய பெருமை வாய்ந்த
ஆடையாகக் கொண்டு, பிறையைக் காலணியாக மிதித்து, விண்மீன்களை
முடிக்கு ஒப்பாகத் தலையில் அணிந்து அவள் பிறந்து தோன்றியுள்ளாள்."