பக்கம் எண் :

முதற் காண்டம்2

         செய்யுள்நிரை பிறழாத் தெளிவுஉரை வழங்க,
         ஒருபெயராற் பல்பொருளும் ஒருபொருளாற் பல்பயனும்
         கருதிக் கவிஞர்தம் கவிஇயல் பெனினும்,
         ஈண்டு விரியும் இதுஎன அஞ்சி
         வேண்டு ஒரு பொருளால் விளம்புதும் உரையே     
10

         மற்றவை மகிழ்வுஉறக்
         கற்றவர் உணர்க
         மீண்டுகல் லாரும் விளைபயன் உற, உரை
         ஈண்டுவெளிப் பொருளாய் இயம்புவ கருத்து

                காப்பியப் பெயர்

         வாடா நறுமலர் வகுத்த அணிஎனும்              15

         வீடா மதுக்கவி வீக்கிய அணிஎனும்
         தேவுலகு ஏற்றும் தேம்பா வணிஎனும்
         பூவுலகு அறியப் புகழ்கதைப் பெயர்என,

               இயற்றிய காரணம்

         பொய்அற, புரைஅற, புரைதரும் வினைஅற,
         மெய்அறத்து அனைவரும் விருப்புஉறீஇ வீடுஉற,  
 20

         வதைஉரும் செவ்வழி ஆசுஅற விளக்கஇக்
         கதைஉகுத்து உரைத்த காரணம் இதுஎன,

                நூல் வந்த வழி

         மூவுலகு ஆளும் முதல்வன் இரங்கிப்
         பூவுலகு அளிப்பப் புதல்வனென்று அவனை
         மற்றவர் முறைஇல மலர்மணம் விடுமெனக்        25

         கற்றவர் வியப்புறக் கன்னி வழுஇல
         இன்புஎழுந்து ஈன்றனள் இணர்அடி தடவி
         அன்புஎழுந்து ஏற்றி அடிபணி இயற்றிய
         வானோர்க்கு அரசாள்
         ஈனோர்க்கு ஒருதாய்                         30

         பேரருட் கடலாய்ப் பெரும்புகழ் மரியென்பாள்
         தேர்அருள் காட்டச் சிறப்பொடு முன்நாள்
         வான்வாழ் மொழியொடு மலர்உமிழ் மதுஎனத்
         தான்வாழ் உவப்பொடு தந்த திருக்கதை,


     19. புரை - பாவம். 21. வதை - துன்பம். ஆசு - குற்றம்
     24. அளித்தல் - மீட்டுக் காத்தல்.
     29-34. இந்நிகழ்ச்சிபற்றிப் பாயிரம். 7-11 பாடல்களிற் காண்க.