பக்கம் எண் :

முதற் காண்டம்200

     'நல்லுணர்வு' என்றது கன்னிமை விரதத்தை. அதனை இவ்வாறு
மறைத்தும், 'திருமணம்' என்ற சொல்லையே எடுத்தாளாமலும் மரியாள்
பேசும் திறம், கன்னிமை விரதத்தின்மீது அவள் கொண்ட பற்றைப்
புலப்படுத்தும். 'அறிந்தாயேல்' என்றது ஐயம் கருதாது, 'அறிந்திருந்தும்'
என்ற பொருள்படக் கொள்க.
 
                         35
நீயுகுத்த வணக்கமென நினைவோங்கி மூவயது நிகழா
                                      முன்னர்
மாயுகுத்த வாழ்வுகுக்கு மணமின்றி யெஞ்ஞான்று மாறாக்
                                      கன்னி
யாயிருப்ப நானுணர்கா லாமென நீ யருட்புரிந்தா யன்றோ
                                      வயா
நோயுகுப்ப வுளத்தலக்கண் ணுழைத்தறுப்ப மணமிப்போ
                                 நுதல்கிற் பானேன்.
 
"நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி, மூ வயது நிகழாமுன்னர்,
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி, எஞ்ஞான்றும்
                                          மாறாக் கன்னி
ஆய் இருப்ப நான் உணர்கால், ஆம் என நீ அருள் புரிந்தாய்
                                          அன்றோ, ஐயா?
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப, மணம்
                                இப்போ நுதல்கிற்பான் ஏன்?"

     "ஐயனே, நீ எனக்கு வகுத்துத் தந்த வாழ்க்கை நெறி இது என்று
நினைவு மேலோங்க, மூன்று வயது நடந்து முடியு முன்பே, மாயத்தைச்
சொரிந்த வாழ்வைப் பொழியும் மணம் புரிதல் இன்றி, எந்நாளும் மாறாத
கன்னியாய் இருக்க வேண்டுமென்று நான் உணர்ந்தபோது, அதுவே
தக்கதாமென்று நீ அருள் புரிந்தாய் அல்லவா? இப்பொழுது, நோயைச்
சொரிந்ததுபோல் என் உள்ளத்தில் பெருந்துன்பம் நுழைந்து வாளாய்
அறுக்கும் படி, மணம் பற்றிக் கருத முற்படுவது ஏன்?"

     இப்போ - 'இப்போது' என்ற சொல்லின் மரூஉ,

                         36
என்றென்றாள் மென்றாளா ளிதயத்திற் றீபாய்ந்துள் ளெரிபுண்
                                    ணன்னா
ளன்றென்றாய் மனமுருகி யாகுலத்தாழ் கடல்மூழ்கி யழுந்தா
                                    நிற்ப
நின்றன்றா யிரக்கதிரோ னேருருக்காட் டியவானோ னிகராக்
                                    கன்னி
மின்றன்றா டொழுதின்னும் விரிவேதத் துறுதியுரை
                                    விளம்புகின்றான்.