பக்கம் எண் :

முதற் காண்டம்204

"கோது இல தாவிதன் குலத்தில், தாதை தாய்
மாது இல தணர்ந்த மா மரி என்பாள், இவண்
ஏது இல வரத்து உயர்ந்து, இலங்கு மீன்களுள்
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ.-

     "குற்றமற்ற தாவிதனின் குலத்தில் உதித்து, தந்தையும் தாயாகிய
மாதும் இல்லாது இழந்து பிரிந்த சிறந்த மரியென்பாள், குற்றமில்லாத
வரங்களினால் பிற மாதரினும் உயர்ந்து, விளங்கும் விண்மீன்களிடையே
மேலெழுந்து நிற்கும் மதிபோல் இக்கோவிலில் விளங்குகின்றாள்."

மாதருள் மாணிக்கமாகிய மரியாளைப் பெற்ற பெருமை பற்றி அத்தாய்
'மாது' எனப் போற்றி உரைக்கப்பட்டாள். விளங்கின்றாள்-'விளங்குகின்றாள்'
என்ற சொல்லின் இடைக்குறை. 'அரோ' அசைநிலை.
 
                  41
ஈரெழு வயதுளா யிலங்கிம் மங்கையை
நேரெழு துணைமண முகிப்ப நீர்த்ததன்
சீரெழு குலத்தினுட் டெரிந்த மாட்சியான்
பேரெழு மணங்கொடு பிணிக்கு வாயென்றான்.
 
"ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இம் மங்கையை.
நேர் எழு துணை மணம் முகிப்ப, நீர்த்த தன்
சீர் எழு குலத்தினுள் தெரிந்த மாட்சியான்,
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய்." என்றான்.

     "பதினான்கு வயதுள்ளவளாய் விளங்கும் இப்பெண்ணை, நேர்மை
பொருந்திய துணைவனோடு மணம் முடிக்க, பெருமையுள்ள அரசச்
சிறப்போடு பொருந்திய தன் குலத்தினுள் உனக்குத் தெரிந்த மாண்புள்ள
ஒருவனை, எங்கும் பேர் விளங்கத் தக்க திருமணத்தின் மூலம் இணைத்து
வைப்பாய்." என்றான் ஆண்டவன்.

     'துணை மணம்' என்றது, உலகியல் போலாது, அம்மண மகன்
துணையாகும் அளவோடு அமைபவன் என்ற உட்கருத்தை நுட்பமாகக்
குறித்தல் காண்க.