பக்கம் எண் :

முதற் காண்டம்205

                   42
முனிவரன் முதலவன் மொழிந்த யாவையுந்
தனிவர மடந்தையை விளித்துச் சாற்றியுண்
ணனிவர வருட்புரி நாத னேவலா
யினிவர மணஞ்செயல் வேண்டு மேயென்றான்.
 
முனிவரன் முதலவன் மொழிந்த யாவையும்
தனி வர மடந்தையை விளித்துச் சாற்றி, "உள்
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆய்,
இனி வர மணம் செயல் வேண்டுமே." என்றான்.

     வரம் பெற்ற முனிவனாகிய சீமையோன் அப்பெண்ணைத் தனியே
வரவழைத்து, எல்லாவற்றிற்கும் முதற் காரணமான ஆண்டவன் தன்னிடம்
சொல்லியவற்றை யெல்லாம் அவளுக்குச் சொல்லி, "இது நம் உள்ளத்தில்
நன்மை வருமாறு அருள் புரியும் ஆண்டவன் கட்டளையாகையால், நீ இனி
வரமாக வந்து சேர்ந்த திருமணம் செய்துகொள்ளல்வேண்டுமே." என்றான்.

     'வேண்டுமே' என்ற சொல், 'வேண்டும்; நீ என்ன சொல்கிறாய்?'
என்ற கருத்தை ஏகாரத்தால் உட்கொண்டு நின்றது.
 
               43
என்றலுங் கேட்டுயிர்ப் பெழவி ரங்கினள்
மன்றலு மன்றல்செய் வாழ்வு மெற்கதே
பொன்றலும் பொருவில புன்க ணாயினு
மொன்றலு மாமிறை யுரைக்கி லேயென்றாள்.
 
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள்:
"மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே
பொன்றலும் பொருவு இல புன்கண் ஆயினும்,
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே." என்றாள்.

     என்று சீமையோன் சொல்லவும் மரியாள் கேட்டுப் பெரு மூச்சு விட்டு
இரங்கினாள்: "திருமணமும் திருமணம் செய்து பெறும் வாழ்வுமாகிய
அதுவெல்லாம் எனக்கு இறத்தலும் ஒப்பில்லாத துன்பமும் ஆகுமெனினும்,
ஆண்டவனே சொல்லுவதாயின், அதற்கு இசைதலும் தக்கதே ஆகும்." என்றாள்.