பக்கம் எண் :

முதற் காண்டம்206

     திருமணப் பேச்சு இறத்தலுக்கும், திருமண வாழ்வு ஒப்பில்லாத
துன்பத்திற்கும் ஒப்பென்று பிரித்துக் காண்க.
 

               44
என்றவை யுணர்ந்தமா தவனு மின்பொடு
மன்றலை முடிதர வங்கண் வைகிய
நன்றமை முனிவரைக் கூட்டி நாயக
னன்றமைந் தறைந்தநற் பணிய றைந்துளான்.
 
என்றவை உணர்ந்த மா தவனும், இன்பொடு
மன்றலை முடிதர, அங்கண் வைகிய
நன்று அமை முனிவரைக் கூட்டி, நாயகன்
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான்.

     என்று கூறியவற்றால் மரியாளின் இசைவைத் தெரிந்து கொண்ட பெருந்
தவத் தோனாகிய சீமையோன், இன்பமாய்த் திருமணத்தை நிறைவேற்றும்படி,
அங்குக் கோவிலில் வாழ்ந்த நன்மை பொருந்திய பிற குருக்களை
அழைத்துக் கூட்டி, ஆண்டவன் அன்று திருவுளம் பொருந்தித் தனக்குச்
சொல்லிய நற்பணியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னான்.
 
                45
அறைந்தவா சகமுணர்ந் தரிய மாதவர்
நிறைந்ததா விதன்குல நிலையின் மாட்சிகொண்
டுறைந்தயா ரையும்விளித் தொருவ னைப்பிரான்
பறைந்ததா கையிலொரு பழுது றாதென்றார்.
 
அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மாதவர்,
"நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு
உறைந்த யாரையும் விளித்து, ஒருவனைப் பிரான்
பறைந்தது ஆகையில், ஒரு பழுது உறாது." என்றார்.

     சீமையோன் சொல்லை அரிய பெருந் தவத்தோராகிய குருக்கள்
உணர்ந்து," நாடெங்கும் நிறைந்துள்ள தாவிதனின் குல வழியில் மாண்புடன்
வாழ்ந்த யாவரையும் நாம் அழைத்து நிறுத்த, அவர்களுள் தகுந்த ஒருவனை
ஆண்டவனே தெரிவித்தானாயின் இம்மணத்திற்கு ஒரு பழுதும் நேராது."
என்றனர்.