பக்கம் எண் :

முதற் காண்டம்209

     "தீயினும் மேலாக என்னைச் சுடும் திருமணத்தை, செய்து கொள்வாயாக
என்று நீயே சொன்னாய். பெண்ணாகிய நான் வாயாலும் அதனை மறுத்துச்
சொல்லுதல் தகுமோ? சாவினும் எனக்குக் கொடியதாகிய இச்செயலினால்
என் உள்ளம் ஒரு புறம் வெதும்புமாயினும், மற்றொரு புறம் உன் திருவுளம்
என்றால் அது இனியதே ஆகும்.

     'ஆங்கொலோ' என்ற விடத்துக் 'கொல்', இறுதியில் 'அரோ' அசை
நிலைகள். செய்க+என்றாய் - 'செய்க வென்றாய்' என வர வேண்டியது,
'செய் கென்றாய்' என வந்தது தொகுத்தல் விகாரம்.
 
                50
கடிசெயுங் காலையுங் கன்னி காக்கநின்
னடிசெயு முறுதியா லகத்தி லோங்கிவான்
குடிசெயு மவரைநேர் குணித்த வென்றுணை
படிசெயுந் திருநகப் பயன்ப குக்குவாய்
 
கடி செயும் காலையும் கன்னி காக்க நின்
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி, வான்
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை
படி செயும் திரு நகப் பயன் பகுக்குவாய்.

     திருமணம் செய்யும் பொழுதும் என் கன்னிமையைப் பழுதின்றிக்
காத்துக் கொள்ள உன் திருவடி தரும் உறுதியால் நான் மனத்தில் எழுச்சி
பெறச் செய்தலோடு, வானுலகில் குடி கொண்டிருக்கும் வானவருக்கு நிகராகக்
குறித்த என் துணைவனும் இவ்வுலகம் தரும் செல்வங்களைப் பழிக்கும்
படியான வரங்களைக் கொடுத்தருள்வாய்."
 
                51
பார்படைத் தனதிருப் பற்றி லானருட்
சீர்படைத் தனநலந் திளைப்பக் கற்பெனும்
பேர்படைத் தனவரம் பெறத்தந் தாயினான்
சூர்படைத் தனவெனைத் துணைக்கொள் வாமரோ.