பக்கம் எண் :

முதற் காண்டம்210

"பார் படைத்தன திருப் பற்று இலான், அருட்
சீர் படைத்தன நலம் திளைப்ப, கற்பு எனும்
பேர் படைத்தன வரம் பெறத் தந்து ஆயினான்,
சூர் படைத்தன எனைத் துணைக் கொள்வு ஆம் அரோ."

     "இவ்வுலகம் கொண்டுள்ள பொருட் செல்வத்தின்மீது பற்றற்றவனாய்
இருத்தலோடு, அருட் செல்வம் படைத்த நலத்தால் நிறைந்து, கற்பு என்னும்
பெருமை கொண்ட வரமும் பெறுமாறு நீயே தந்து அமைந்த ஒருவனே,
அச்சங் கொண்ட என்னைத் துணைவியாகக் கொள்ளுதல் தகும்."

     படைத்தன - படைத்த: பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்று
நின்றது. 'அரோ' அசைநிலை. கற்பு: (1) ஆடவர்க்கும் மகளிர்க்கும்
பொதுவாக அமைந்துள்ள தூய்மையறம் (Chastity): தகாத காமத்தால் மன
மொழி மெய்கள் தூய்மை கெடாமை. (2) இவற்றோடு, இல்லற உறவை
அறவே விலக்கிய உயர்தூய்மை (Celibacy). இங்குக் கருதியது இரண்டாம்
வகையெனக் கொள்க.
 
                    52
உடைப்பதற் கருந்துய ருயிர்த்த வாழ்வுகள்
கிடைப்பதற் குரித்துணை கிடைப்பக் கேட்கிலன்
துடைப்பதற் கருந்துகட் டுடைத்து நின்னருள்
படைப்பதற் கறத்துணை பணிக்கு வாயென்றாள்.
 
 "உடைப்பதற்கு அருந் துயர் உயிர்த்த வாழ்வுகள்
கிடைப்பதற்கு உரித்துணை கிடைப்பக் கேட்கிலன்.
துடைப்பதற்கு அருந் துகள் துடைத்து, நின் அருள்
படைப்பதற்கு அறத் துணை பணிக்குவாய்." என்றாள்.

     "நீக்குவதற்கு அரிய துன்பங்களைக் கூடவே கொண்டுபிறந்த இல்லற
இன்ப வாழ்வுகள் கிடைப்பதற்கு, உரிய துணைவன் கிடைக்க வேண்டுமென்று
நான் கேட்க மாட்டேன். துடைப்பதற்கு அரிய குற்றங்களை எங்கும்
துடைத்து, உனது அருளை மக்களுக்கெல்லாம் படைப்பதற்கு, ஏற்ற அறத்
துணைவன் ஒருவனை எனக்குக் கட்டளையிடுவாய்." என்றாள.்