பக்கம் எண் :

முதற் காண்டம்211

                 53
என்றுபெய் மாரியா லெழுந்த வெள்ளமாய்ச்
சென்றுமொய் வேலைமேற் றிரண்ட வாறுபோற்
றுன்றுதுய் மணஞ்செயத் தெரிந்த சூசைமே
னன்றுபெய் வரமெலா நாத னீட்டினான்
 
என்று, பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய்,
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல்,
துன்று துய் மணம் செயத் தெரிந்த சூசை மேல்,
நன்று பெய் வரம் எலாம் நாதன் நீட்டினான்.

     என்று இவ்வாறு மரியாள் வேண்டவும், பெய்த மழையினால் பெருகிய
வெள்ளம் உண்டாகி, நீர் திரண்ட கடலின்மேல் தானும் போய்த் திரண்ட
தன்மைபோல, தூய்மை செறிந்த திருமணம் செய்யவென்று மணமகனாகத்
தெரிந்துகொண்ட சூசையின்மேல், ஆண்டவன் நன்மையைப் பொழியும்
வரங்களை யெல்லாம் மேலும் நீட்டிக் கொடுத்தான்.

     சூசை ஏற்கெனவே பெற்றிருந்த வரங்கள் கடலாகவும், மரியாளின்
வேண்டுதலால் இறைவன் நீட்டித் தந்த வரங்கள் அக்கடலின்மேல் மழை
வெள்ளம் போய்த் திரண்டதாகவும் கொள்க.

              54
இன்னரு முறைக்கிவ ரிருவ ரெய்திய
துன்னரும் வரங்களாற் றுளையி லார்தமுள்
ளுன்னருந் துணைவரென் றுணர்ந்த நாயகன்
பன்னரு மணம்பணர் பயன்சொல் வாமரோ
 
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய
துன்ன அரும் வரங்களால் துணை இலார், தமுள்
உன்ன அருந் துணைவர் என்று உணர்ந்த நாயகன்,
பன்ன அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ.

     இத்தகைய அரிய முறையில் இவ்விருவரும் அடைந்துள்ள
கிடைத்தற்கரிய வரங்களால் தமக்கு யாரும ஒப்பில்லாதவராய், தம்முள்
நினைத்தற்கரிய துணைவராவார் என்று உணர்ந்த ஆண்டவன்,