பக்கம் எண் :

முதற் காண்டம்217

     "மனமே, நீ என்றும் மறவாமல் வருந்துவாயாக. நெருப்பையே உண்ணும்
கண்களே, அழுவீர்களாக." என்று உள்ளம் ஏங்கி, கண்கள் பொங்கிய, அணி
போன்ற மரியாள் அருவியும் ஒவ்வாத தன்மையாய் இடையறாது அழுவாள்.

     கலுழ்ந்துதிர் - கலுழ்திர்; 'சொற்றுதிர்' என்பதுபோல் வந்தது.

            கடவுள் காட்டும் கன்னிமைக் காவலன்  

             65
உள்ளுற்றவ ணங்கில ணங்குளையத்
தெள்ளுற்றவ ருந்தெரு டேர்ந்திறையோ
னள்ளுற்றவ ழுங்கும ழுங்கலறுங்
கள்ளுற்றக னிந்தசொ லுற்றனனால்.
 
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய,
தெள் உற்ற அருந் தெருள் தேர்ந்து இறையோன்
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அறும்
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன் ஆல்:

     தெய்வப் பெண் போன்ற மரியாள் இவ்வாறு தன் உள்ளத்திற் கொண்ட
துன்பத்தால் வருந்திக் கொண்டிருக்க, ஆண்டவன் தெளிவு கொண்ட தன்
அரிய ஞானத்தால் தேர்ந்தெடுத்து, அவள் அமிழ்ந்து கிடக்கும் செறிந்த
வருத்தம் நீங்குவதற்கு ஏற்ற தேன் போன்று கனிந்த சொற்களைச்
சொல்லலானான்.

     'ஆல்' அசைநிலை.

 
              66
அருளெஞ்சில நெஞ்சவி ருஞ்சுதையே
மருணெஞ்சொரு வஞ்சனை யஞ்சியதோ
திருவெஞ்சர ணஞ்சலி யுஞ்செயுநின்
தருமஞ்செறி தஞ்சமு மெஞ்சியதோ.
 
"அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே,
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ?
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின்
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியதோ?"