பக்கம் எண் :

முதற் காண்டம்218

     "தெய்வ அருள் குறைதல் இல்லாது நெஞ்சு ஒளிரும் மகளே, உனது
மருண்ட நெஞ்சு ஒரு வஞ்சனை உள்ளதென்று அஞ்சியதோ? அழகிய எமது
அடியை அஞ்சலி செய்யும் உன் புண்ணியங்களால் செறிந்துள்ள ஆதரவும்
குறையுடையதாயிற்றோ?"

     'என் சரண்' என்னாது, 'எம் சரண்' எனப் பன்மைபடச் சொல்லியது,
ஒரே கடவுளின் ஆள் வகை மூவரும் இத்திருவவதார நிகழ்ச்சியில் இணைந்து
செயல்படுதலை உட்கருத்தாகக் கொண்டதெனலாம். அல்லது மரியாதைப்
பன்மை எனலாம்.
 
                67        
கொன்னேகுலை யேல்குலை யேல்குழைவே
னின்னேசில கன்னிநி னைத்தவிதத்
தென்னேவலி னாறுணை யெய்தினனே
கன்னேரிய கன்னிமை காக்குவனால்
 
"கொன்னே குலையேல், குலையேல்! குழைவு ஏன்
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து?
என் ஏவலினால் துணை எய்தினனே,
கல் நேரிய கன்னிமை காக்குவான் ஆல்."

     "வீணே மனம் குலையாதே, குலையாதே! உனது குற்றமில்லாத
கன்னிமையை நினைத்த விதமாய் நீ குழைவது ஏன்? என் ஏவலினால்
உனக்குத் துணையாய் வந்து சேர்ந்தவன், மலையை ஒத்த உறுதி வாய்ந்த
உன் கன்னிமையைக் காப்பான்."
 
              68
நீயாவிய நீர்மையி னேர்துணைவ
னோயாதத வத்துனோ டொத்தனனாய்த்
தூயாரினு மூங்கரு டூயனுமாய்
வீயாதொளிர் கன்னிமை வீற்றியல்பாம
 
"நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன்
ஓயாத தவத்து உனோடு ஒத்தனன் ஆய்,
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய்,
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம்,"