பக்கம் எண் :

முதற் காண்டம்22

''கூர் விளைத்த அருட் குரு விதி போன்று, ஒன்று கோடி
நீர் விளைத்த நெல் நிரம்ப!'' என வித்தினர் இரட்ட,
ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால்,
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே.

     நெல்லை விதைத்தவர், ''மிகுதியாகக் கொண்ட அருளுள்ள குரு
விதித்த ஆசியுரை போன்று, நீர் விளைவித்த இவ்விதை நெல் ஒன்று
கோடியாக விளைந்து நிரம்புவதாக!'' என்று முழங்குதலாலும் அழகு
பொருந்திய பல்லை உடைய உழத்தியர் அப்பொழுது ஆடும் குரவைக்
கூத்தின் தன்மையாலும், அவ்விதைப்புக் காட்சி தேரோடு கொண்டாடிய
சிறப்புப் பொருந்திய ஒப்பற்ற திருவிழா அலங்காரம் போன்று விளங்கியது.

     'நிரம்பென' - நிரம்ப + என = 'நிரம்பவென' என்பதன் தொகுத்தல்
விகாரம்.
          
                    13
நோக்க வின்புள நுகரவொண் முளரியோ டாம்ப
னீக்க லாதெலா நீர்மலர் களையெனக் கட்ட
லாக்க மாக்கினு மறனிழந் தாவது கேடென்
றூக்க மாண்பின ரொருங்கவை யொழிக்குதல் போன்றே
 
நோக்க இன்பு உளம் நுகர, ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது, எலா நீர்மலர் களை எனக் கட்டல்,
ஆக்கம் ஆக்கினும், அறன் இழந்து ஆவது கேடு
என்று ஊக்க மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே.

     பார்வைக்கு இன்பமென்று உள்ளம் அழகை நுகர முற்படுமாயினும்,
ஒளி பொருந்திய தாமரையையும் ஆம்பலையுமே விலக்காமல் எல்லா நீர்
மலர்ச் செடிகளும் பயிருக்குக் களையே என்று அவ்வுழத்தியர்
பறித்தொழிப்பர். இச்செயல், செல்வங்களை ஆக்கித் தருமாயினும், அறத்தை
இழந்து தேடிய செல்வம் கேடு தருவதென்று தெரிந்து, ஊக்கத்தை நம்பிய
மாண்புடையார் அவற்றை ஒருங்கே ஒழித்துவிடுதலைப் போன்று அமைந்தது.
         
                   14
பூரி யார்திருப் போறலை பசியகூழ் நிறுவி
நீரி னார்தலை நேரநேர் வளைவொடு பழுத்த
வார மானுநெல் லறுத்தரி கொண்டுபோ யங்கட்
போரி தாமெனக் களித்தனர் போர்பல புனைவார்.