பக்கம் எண் :

முதற் காண்டம்225

கடியாய் அலர்ந்த ஒளிர் காந்தளின் நேர் கரத்தில்
இடியாய் அணிப் பொன் வளை இட்டு அணிவாரும்
                               அல்லால்,
கொடி ஆய தண்ண நறை, நானமொடும், குளிர்ந்த
பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார்.

      மணத்தோடு மலர்ந்த ஒளியுள்ள காந்தள் மலர் போன்ற கைகளில்
ஒன்றோடொன்று மோதி ஒலித்த தன்மையாய் அழகிய பொன் வளையல்களை
இட்டு அணியும் சிலரும் அல்லாமல் கொடியாயுள்ள குளிர்ந்த நறையும்,
கஸ்தூரியோடு, குளிர்ந்த பொடியாயுள்ள நறுமணச் சுண்ணங்களும்
பூசுவதற்கென்றும் சில மாதர் வந்து செறிந்தனர்.

     நறைக் கொடியைக் காய விட்டுப் பொடி செய்து பூசுதல் மரபு.
 
                   80
செம்பொற் சிலம்புஞ் செருவோடு சிலம்ப லன்றிப்
பைம்பொற் சிலம்பும் பலகிண் கிணியும் படர்ந்த
வம்பொற் சிலம்பு மணிமே கலையோடு பொற்பா
ரம்பொற் சிலம்புங் கலனுஞ் சிலர் கொண் டடைந்தார்.
 
செம் பொன் சிலம்பும்,செருவோடு சிலம்பல் அன்றிப்
பைம் பொன் சிலம்பும் பல கிண் கிணியும் படர்ந்த
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு, பொற்பு ஆர்
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார்.

     செம்பொன்னாற் செய்து உள்ளே மணிப் பரல் இட்ட சிலம்பும்,
பரல்கள் பொன்னோடு மோதுதலால் ஒலித்தல் அல்லது பசும்பொன்னே
பொன்னோடு மோதுதலால் ஒலிக்கும் பல கிண்கிணிச் சதங்கைகளும், ஒளி
படர்ந்த அழகிய பொன்னாற் செய்து தொங்கு பொன்மணிகள் ஒலிக்கும்
மணிகள் பதித்த மேகலையோடு, அழகு நிறைந்த பொன்னாற் செய்து
ஒன்றோடொன்று மோதிக் கலகலக்கும் பிற அணிகலன்களும் கொண்டு
சிலர் வந்து சேர்ந்தனர்.

     மேகலை - ஒட்டியாணம் போன்று ஆடையின்மேல் அணியும்
இடுப்பணி.