| 81
|
நல்வாச
முண்ட நறுநெய் நனிபூசி நானங்
கொல்வாச முண்ட குளிர்பூம் புனலாட்டி வெந்த
பல்வாச முண்ட புகைபாய்ந் தவிர்பாலி னாவி
வெல்வாச முண்ட துகிலேந் தினர்வேய்ந் தடைந்தார் |
| |
நல் வாசம் உண்ட
நறு நெய் நனி பூசி, நானம்
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி, வெந்த
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார். |
நல்ல மணமுள்ள
சிறந்த நெய்யை மிகுதியாகப் பூசி, கஸ்தூரியின்
வாசனையையும் மிஞ்சிய வாசனைகொண்ட குளிர்ந்த அழகிய நீரில்
குளிப்பாட்டி, எரிந்த பல பொருள்களின் வாசனைகொண்ட புகை பாய்ந்து
ஒளிர்வதும் பாலின் ஆவியை மென்மையால் வெல்வதும் பிற மணம்
கலந்ததுமாகிய ஆடையை ஏந்தினவராய்ச் சிலர் வந்து சூழ்ந்தனர்.
| 82
|
கடுகொண்ட
கண்ணின் கவினார் கனிவாய வாசைக்
கொடுகொண்ட யாவு மிவள்கண்டு குளிர்ந்த சொல்லா
லுடுகொண்ட சென்னி யொசித்தொல்லை யகன்மி னென்னா
நடுகொண் டகன்று நகை கொண்டு நடந்து போனாள். |
| |
கடு கொண்ட கண்ணின்
கவினார் கனிவு ஆய ஆசை
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு, குளிர்ந்த சொல்லால்,
உடு கொண்ட சென்னி ஒசித்து, "ஒல்லை அகல்மின்!"
என்னா, நடு கொண்டு அகன்று, நகை கொண்டு நடந்து போனாள்.
|
நஞ்சு
கொண்ட கண்ணின் அழகுடையாராகிய அம்மகளிரெல்லாம்
கனிவுள்ள ஆசையோடு தம் கைகளில் கொண்டு நின்ற யாவற்றையும் இவள்
கண்டு, விண்மீன்களை அணிந்து கொண்ட தன் தலையை அசைத்து,
குளிர்ந்த சொல்லோடு, "விரைவில் இவற்றோடு அகலுங்கள்!" என்று
புறக்கணித்து, அவர்களுக்கு நடுவாக விட்டகன்று, சிரித்த வண்ணமாய்
நடந்து போனாள். |