பக்கம் எண் :

முதற் காண்டம்228

     வானத்திற்கு உயிராகிய ஞாயிற்றை ஆடையாக அணிந்து, வானத்தின்
மேல் அதன் கண்ணும் உயிருமாகிய ஒளியுள்ள விண்மீன்களை முடியாகச்
சூடி, நல்ல கால்களை அவ்வானின் குளிர்ந்த ஆவியாகிய மதி தாங்கிக்
கொண்டிருக்கும் இவ்வித அணிகளின் மேலும் இன்னும் ஓர் அணிகலன்,
வீணைக்கு உயிராகியது போன்ற குரலை உடைய மரியாளுக்கு நலம்
தருமோ?

     வானத்தை விளக்கி நிற்றலின் ஞாயிறும் மதியும் விண்மீன்களும்
அதற்கு உயிர் ஆயின. மின்னும் விண்மீன் இமைகொட்டும் கண்ணும்
ஆயிற்று.
 
                 85
வஞ்சஞ் செறிந்த நிலமண் டியபூ ணனைத்துங்
கஞ்சஞ் செறிந்த வடியாள் கழிவாய்க் கடிந்தே
யஞ்சஞ் செறிந்த நடையா டியகன் றனந்தன்
விஞ்சஞ் செறிந்த மிளிர்வா னணிவேய்ந் தணிந்தாள்.
 
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும்,
கஞ்சம் செறிந்த அடியாள், கழிவாய்க் கடிந்தே
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று, அனந்தன்
விஞ்சம் செறிந்த மிளிர் வான் அணி வேய்ந்து அணிந்தான்.

     தாமரை மலர்போல் அழகு செறிந்த அடிகளை உடைய மரியாள்,
வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில் குவிந்துள்ள அணிகலன்கள் அனைத்தையும்
கழிவுப் பொருள்களாக விலக்கி, அன்னத்தைப் போன்ற நடைகொண்டு
அகன்று போகவே, தனக்கு அந்தமே இல்லாத ஆண்டவன் அழகு செறிந்த
தன்மையாய் ஒளிரும் வானுலகிற்கு உரிய அணிகலன்களை அவளுக்கு
அழகுறச் சூடினான்.
 
                  86
வானாரு மெய்தி யறமே மணியென் றணிந்தார்
மீனாரு மோதி மிளிர்தோ டெனவேய்கு கின்றார்
தேனாரு மாலைத் திரளென் றருள்சேர்க்கு கின்றார்
கானாரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார்.
 
வானாரும் எய்தி, அறமே மணி என்று அணிந்தார்;
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார்;
தேன் ஆரும் மாலைத் திரள் என்று அருள் சேர்க்குகின்றார்;
கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார்.