பக்கம் எண் :

முதற் காண்டம்232

            92
பல்லும் விழியும் பவளத் திதழுஞ்
சொல்லுங் கனியஞ் சொலுமொண் ணுதல்கொள்
வில்லுங் கரமும் விரிசீ றடியுஞ்
செல்லுந் திசைசெல் லுறழ்செல் லருளே.
 
பல்லும், விழியும், பவளத்து இதழும்,
சொல்லும் கனி அம் சொலும், ஒள் நுதல் கொள்
வில்லும், கரமும், விரி சீறு அடியும்
செல்லும் திசை செல் உறழ், செல் அருளே.

     அவள் பல்லும், கண்ணும், பவளம் போன்ற உதடும், அவள்
சொல்லும் கனி போன்ற அழகிய சொல்லும், ஒளி பொருந்திய நெற்றியாகக்
கொண்டுள்ள வில்லும், கையும், ஒளி விரிந்த சிறிய அடியும் செல்லும் திசையெல்லாம் தன்னையும் முந்திக்கொண்டது போல் செல்லும் அருள்,
மேகத்திற்கே ஒப்பு ஆகும்.

     'ஆகும்' என ஒரு சொல், வருவித்து முடிக்கப்பட்டது. நெற்றியை 'வில்'
என்றது உருவகம். 'செல் உறழ்' என்ற விடத்து 'உறழ்' என்ற சொல் 'உறழும்'
என்ற பொருளில் நின்றது.
 
              93
அரிதாய் மடவாள் வரவாங் கெவரும்
பரிவாய் விழிவிண் டனர்பார்க் குதலு
மெரிவா னிலுலா மதியெய் தியகால்
விரியாம் பல்விரைச் சினைவிண் டனபோல்.
 
அரிதாய் மடவாள் வர, ஆங்கு எவரும்
பரிவாய் விழி விண்டனர் பார்க்குதலும்,
எரி வானில் உலாம் மதி எய்திய கால்,
விரி ஆம்பல் விரைச் சினை விண்டன போல்.

     இளங் கன்னியாகிய மரியாள் வெளியே அரிதாகவே வர, அங்குள்ள
யாவரும் அன்போடு கண்கள் விரியப் பார்த்தலும், வானத்தில் ஒளியோடு
உலாவும் நிலவு எழுந்து வந்தபோது, அதனைக் கண்டு விரியும் இயல்புள்ள
ஆம்பல்களெல்லாம் தம் வாசனையுள்ள அரும்புகளை விரித்த தன்மைபோல்
தோன்றும்.