பக்கம் எண் :

முதற் காண்டம்236

     "நம் அருகே வந்துள்ள வானுலகிற்கு உரிய அழகு நிறைந்த இவள்
முக அழகைப் பருகுவன போல் நம் கண்கள் பார்த்த பின், நாம்
உருகாமலும் கருணை கொள்ளாமலும் இருப்போமாயின், நம் உள்ளம்
அசைவற்ற பாறையின் திரளே ஆகும்!." என்றும் சொல்லுவர்.

              100
அவளோ டினிதாய் மணமே யமைவா
னுவமோ டிறையோ னுளமொத் தனனோ
தவமோ கையனோ தகவா னவனோ
வெவனோ விவளெய் துவனென் றறைவார்.
 
"அவளோடு இனிதாய் மணமே அமைவான்,
உவமோடு, இறையோன் உளம் ஒத்தனனோ?
தவம் ஓகையனோ? தகவு ஆனவனோ?
எவனோ இவள் எய்துவன்!" என்று அறைவார்.

     "அவளோடு திருமணத்திற்கு இனிதாய் அமைபவன், அவளுக்கு
எல்லா வகையிலும் ஒத்திருத்தலோடு, இறைவன் திருவுளத்திற்கும்
பொருந்தியவனாய் இருப்பானோ? தவத்தின் மீது மகிழ்ச்சி கொள்பவனாய்
இருப்பானோ? தகுதி வாய்ந்தவனாய் இருப்பானோ? இவளை மணமகளாய்
அடையும் பேறு கொண்டவன் எவனோ என்றும் கூறுவர்.

     'உவமோடு என்று விடத்து, 'உவமை' என்ற சொல் 'உவம்' என்று
கடைக்குறையாய் நின்றது. 'தகவானவனோ' - தகுதி வாய்ந்த
வானவனாகவே இருப்பானோ என்றும் கொள்ளலாம்.
 
             101
மின்பட் டமடந் தைவிடங் கமுறீஇ
மன்பட் டமணம் பெறுவான் முதலோ
னன்பட் டனதா ணலம்வீட் டுநலம்
பின்பட் டனன்வான் பெறுமென் றறைவார்
 
"மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ,
மன் பட்ட மணம் பெறுவான், முதலோன்
நன் பட்டன தாள் நலம், வீட்டு நலம்,
பின் பட்டனன் வான் பெறும்." என்று அறைவார்.