பக்கம் எண் :

முதற் காண்டம்237

     "மின்னல் போன்ற இப்பெண்ணின் குடங்கையைப் பொருந்தி, நிலை
கொண்ட திருமணத்தால் மனைவியாகப் பெறும்பேறு கொண்ட அவன்,
இறைவனின் நன்மை பொருந்திய திருவடியைப் பொருந்தும் நலமும்,
பேரின்ப வீட்டு நலமும் இவ்வுலகிலேயே பெற்றிருந்து, பின் இறந்து
வானுலகமும் பெறுவான்." என்றும் சொல்வர்.

     'நன் பட்டன' என்ற விடத்து, 'நன்மை' என்பது 'நன்' எனக்
கடைக்குறையாய் நின்றது. பட்டனன் - பட்டு: முற்றெச்சம். பெறும் -
பெறுவான்: 'செய்யும்' என் முற்று ஆண்பாலுக்கு வந்தது.

               பூத்த மலர்க் கொடியோன்
 
              102
அறைவா ரறைநீக் கியருந் தவனாங்
குறைவார் கையிலே தனியொவ் வொருகோ
லிறைவாய் முறையென் றதையீந் தெவரும்
முறைவாய் விதிகேட் பமொழிந் தனனால்.
 
அறைவார் அறை நீக்கி அருந்தவன், ஆங்கு
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல்
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும்
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன் ஆல்.

     அரிய தவத்தோனாகிய சீமையோன் இவ்வாறு பேசுவார்
பேச்சையெல்லாம் விலக்கி, திருமணத்தின் பொருட்டு அங்கு வந்து
தங்கியிருப்போர் கையில் தனித்தனியாக ஒவ்வொரு கோலை, "இது
இறைவன் வாயினின்று கேட்டறிந்த முறை," என்று சொல்லிக்கொடுத்து,
யாவரும் அம்முறை திருமணமாய் வாய்ப்பதற்கான விதியை இறைவனிடம்
மன்றாடிக் கேட்குமாறு கூறினான்.

     'ஆல்' அசைநிலை. 'அதை' என்பது இடையே வேண்டாது நின்றது.
 
               103
மொய்ப்பட் டலைநீர் முடுகுந் தலமேல்
மெய்ப்பட் டெதிரற் றொளிர்மின் கொடியைக்
கைப்பட் டுறலோர்ந் துகளித் தெவரும்
மைப்பட் டவளன் றனிலஞ் சினனால்.