பக்கம் எண் :

முதற் காண்டம்238

மொய்ப் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல்
மெய்ப் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியைக்
கைப் பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும்,
மைப் பட்ட வளன் தனில் அஞ்சினன் ஆல்.

     அலை நீர் திரண்டு மோதும் இவ்வுலகில், மெய்யின் வசப்பட்டும்
தனக்கு நிகர் அற்றும் ஒளிரும் மின்னற்கொடி போன்ற மரியாளை, பிறர்
யாவரும் தம் கைக்கு அகப்பட்டு மணத்தால் அடைதலை நினைந்து
மதிழ்ந்திருக்கையில், மயக்கங் கொண்டவளனோ அப்படியொன்று தனக்கு
நேர்ந்துவிடுமோவென்று தனக்குள் அஞ்சிக் கொண்டிருந்தான்.

                'ஆல்' அசைநிலை.

            104
திறலார் திருநீ ரியதீங் கொடியைப்
பெறலா கவெனக் கொருபே றுளதோ
துறவாய் மணநீக் குபசொல் லியபின்
லுறலா மணமோ வெனவுள் ளினனால்.
 
'திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியைப்
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ?
துறவு ஆய், மனம் நீக்குப சொல்லிய பின்,
உறல் ஆம் மணமோ?' என உள்ளினன் ஆல்.

     'வல்லமை நிறைந்த வானுலகச் செல்வமே போன்ற இனிய மலர்க்
கொடியாகிய மரியாளை மனைவியாகப் பெறத்தக்க ஒரு பேறு எனக்கு
உண்டோ? மேலும், துறவு மேற்கொண்டு, திருமணத்தை விலக்கி
வாழ்வதாக வாக்குறுதி சொல்லியபின், மணம் புரிந்துகொள்ளுதல் தகுமோ?'
என்றெல்லாம் அவன் எண்ணினான்.

     'ஆல்' அசைநிலை. 'உறல் ஆம் மணமோ?' என்பதனை 'மணம்
உறல் ஆமோ?' என மாற்றுக.
 
              105
உள்ளும் பொழுதே யிவனோங் கியகோல்
கள்ளுங் கடியும் பொழிகா மரிதழ்
விள்ளுஞ் செழுவெண் மலர்பூத் தமையான்
மள்ளும் விரையா லயமல் கியதே.