பக்கம் எண் :

முதற் காண்டம்240

செழுந் தூய் துகிர் சே அடி, பொன் நிற வாய்,
விழுந் தூவிய வெண் சிறை வேய் புறவம்,
கொழுந் தூவி கொடு ஓங்கி, வளன் தலை மேல்
எழும் தூவியை நீட்டி இருந்ததுவே.

     செழுமையான தூய பவளம் போன்ற செந்நிறக் கால்களும், பொன்
போன்ற நிறமுள்ள அலகும், சிறந்த இறகுகளாலாகிய வெண்ணிறச் சிறகும்
அழகு செய்த ஒரு புறா, தனது கொழுமையான இறகுகளோடு உயர
எழுந்து, விரியும் இறகுகளை நீட்டிய வண்ணமாய்ச் சூசையின் தலைமேல்
அமர்ந்தது.

     சேயடி - செம்மை + அடி. 'விழுத்தூவி' செய்யுளோசைப் பொருட்டு
'விழுந்தூவி' என மெலித்தல் விகாரம் பெற்றது. 'வாய்' பறவைக் காதலின்
'அலகு' எனக் கொள்க. புறவம் - புறவு: புறா.
 
             108
கண்ணா மணநான் செயலாங் கசடென்
றுண்ணா ணியசூ சையுளைந் துருக
விண்ணா தனுரந் தரவே வெருவற்
றெண்ணா தனகாட் சியையீந் தறைவான்.
 
'கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு' என்று,
உள் நாணிய சூசை உளைந்து உருக,
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று
எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான்:

     'கருதாத மணம் நான் செய்து கொள்ளுதல் குற்றமாகும்,' என்று
உள்ளம் நாணிய சூசை நொந்து உருகவே, விண்ணுலகத் தலைவனாகிய
ஆண்டவன் அச்சம் நீக்கி அவனுக்கு உறுதிதருமாறு, எண்ணத்திற்கு
எட்டாத காட்சியை வழங்கிப் பின் வருமாறு சொல்வான்:

     'ஆங் கசடு' என்பதனைக் 'கசடு ஆம்' என மாற்றுக. 'வெரு அறுத்து
உரம் தரவே' என்று கொள்க.