|
வயது முதிர்ந்த
வரம் பெற்ற முனிவனாகிய சீமையோன், ஞாயிறும்
திங்களுமாகிய ஒளி பொருந்திய வானச் சுடர்கள் இரண்டினையும் போன்ற
இருவரையும், "வாழ்க!" என்று ஆசி மொழியோடு தாவி அணைத்துத்
தாங்கினான்: "எல்லாம் ஆராய்ந்து அறிய வல்ல ஆண்டவன் ஏவிய
விதிமுறை இதுவே ஆகி, தனது ஆசியால் நீங்கள் இருவரும் இணை என
அழகுசெய்த இத்திருமணத்தை, இனி நாமும் விரும்பி முடித்து வைத்தல்
வேத முறையாகும்" எனக் கூறினான்.
| 118 |
காந்தள்
மிசையொரு தாம ரையினலர் காண லெனவரு மாதவன்
காந்தன் விரியுகை நான மலர்மிசை காதை கரமணி வாகிவான்
வேந்த னுமதுரி தாய முறையுரு மேவி வரவெனு மாசியோ
டேந்த மறைமுறை யேதில் முடிதர வேதி லருமண மாயதே. |
| |
காந்தள் மிசை
ஒரு தாமரையின் அலர் காணல் என, அரு மா தவன்
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு, "வான்
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர!" எனும் ஆசியோடு
ஏந்த, மறை முறை ஏது இல் முடிதர, ஏது இல் அரு மணம் ஆயதே. |
கார்த்திகைப்
பூவின் மேல் ஒரு தாமரை மலரைக் கண்டாற் போல,
மணமகனாகிய சூசையின் விரிந்த கையாகிய வாசனையுள்ள மலரின் மேல்
மணமகளாகிய மரியாளின் கையை அரும் பெருந் தவத்தோனாகிய
சீமையோன் அழகாகச் சேர்த்து வைத்து, "வானுலக அரசனாகிய ஆண்டவன்
உமக்கு உரிய குல முறையில் மனித உருவம் எடுத்துப் பிறந்து வருவானாக!"
என்னும் ஆசி மொழியோடு அக்கைகளை ஏந்திக் கொள்ளவே, வேதச்
சடங்கு முறையெல்லாம் குறையற முடிய, எவ்வகையாலும் குறையில்லாத
அரிய திருமணம் நிறைவெய்தியது. |