பக்கம் எண் :

முதற் காண்டம்248

                     119
முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருடொலி
                                     முடிவிலா
கடுகு பறையொலி கடுகு கலமொலி கடுகு கடமொலி
                                     கனிவெழாத்
தொடுகு குழலொலி தொடுகு குரலொலி தொடுகு துதியொலி
                                     தொடுதலாற்
படுகு முகிலொலி படுகு கடலொலி படுத லிலமண மாயதே
 
முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி முடுகு முருகு ஒலி முடிவு
                                         இலா,
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி
                                         தொடுதலால்,
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி, படுதல் இல மணம் ஆயதே.

       முடுகுகின்ற முரசொலியும் மத்தள ஒலியும் முருட்டின் ஒலியும்
முடிவில்லாமல் ஒலிக்கவும், விரைந்து எழுகின்ற பறையின் ஒலியும்
வீணையின் ஒலியும் கடத்தின் ஒலியும் கனிவோடு எழுந்து ஒலிக்கவும்,
இயக்குகின்ற நாதசுர ஒலியும் மக்கள் பாடும் குரலொலியும் வாழ்த்தொலியும்
ஒன்றாக இணைவதனால், மேகத்தில் எழும் இடியொலியும் கடலில் எழும்
அலையொலியும் கெடுமாறு, எவ்வகையிலும் குறைபடுதல் இல்லாத
திருமணம் நிறைவெய்தியது.

     ஈற்றடியில் இரண்டிடத்தும் படுகு என்ற சொல்லை 'செய்பு' எனும்
வாய்பாட்டு வினையெச்சமாகப் பொருள் கொள்க.

                     120
வாழி யறவுரு வாழி மறையுரு வாழி திருவுரு மானுவீர்
வாழி யெமதுயிர் வாழி யுலகுயிர் வாழி யுயிருயிர் போலுவீர்
வாழி யருணிலை வாழி தவநிலை வாழி நிலநிலை யாயினீர்
வாழி யெனவிவர் வாழி யெனவவர் வாழு மருமண மாயதே
 
"வாழி, அற உரு, வாழி, மறை உரு, வாழி, திரு உரு மானுவீர்!
வாழி, எமது உயிர், வாழி, உலகு உயிர், வாழி, உயிர் உயிர்
                                        போலுவீர்!
வாழி, அருள் நிலை, வாழி, தவ நிலை, வாழி, நில நிலை ஆயினீர்!
வாழி!" என இவர், "வாழி!" என அவர், வாழும் அரு மணம் ஆயதே