பக்கம் எண் :

முதற் காண்டம்249

     "அறத்தின் வடிவமும் வேதத்தின் வடிவமும் செல்வத்தின் வடிவமும்
போன்றவர்களே, நீங்கள் வாழ்க! எமது உயிரும் உலகுக்கு உயிரும்
உயிர்களுக்கெல்லாம் உயிரும் போன்றவர்களே வாழ்க! அருளுக்கு
உறைவிடமும் தவத்துக்கு உறைவிடமும் நிலத்திற்கு உறுதி நிலையும்
ஆனவர்களே, வாழ்க! வாழ்க!" என்று இப்பக்கம் உள்ளவர்களும், அதே
போல், "வாழ்க!" என்று அப்பக்கம் உள்ளவர்களும் வாழ்த்த,
நல்வாழ்க்கைக்கான அரிய திருமணம் நிறை வெய்தியது.
 
                      121
பொறுமை யறுபகை பொதுளு பழியமர் பொதுளு சினமிடர்
                                      புரையறா
நறுமை யறுசல நணுகு மறமருள் நணுகு மிருணிசி நயமறுஞ்
சிறுமை யுறுதுயர் செறியு மடிமிடி செறியும் வெருவிழி
                                      சிலுகுநோய்
வறுமை மறுபவ மனைய விவையினி மடிய வருமண மாயதே
 
பொறுமை அறு பகை பொதுளு பழி அமர் பொதுளு சினம் இடர்
                                         புரை அறா,
நறுமை அறுசலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம்
                                         அறும்
சிறுமை உறுதுயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி
                                         சிலுகு நோய்
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய, அருமணம்
                                         ஆயதே

     பொறுமையற்ற பகையும் நிறைந்த பழியும் போரும் பொங்கும் சினமும்
துன்பமும் குற்றமும் அற்றுப் போகவும், நன்மையற்ற பொய்யும் நெருங்கும்
கொலையும் மயக்கமும் நெருங்குகின்ற நரகமும் இருளும் இன்பமற்ற
சிறுமையைத் தரும் துயரமும் செறியும் சோம்பலும் கேடும் செறிந்த அச்சமும்
இழிவும் துன்பந்தரும் நோயும் வறுமையும் கறையும் பாவமும் போன்ற
இவையெல்லாம் இனி மடிந்து போகவும், இந்த அரிய திருமணம்
நிறைவெய்கிறது.

     இருளும் நிசியும் இணைந்து நின்ற விடத்து, முன்னது நரகமும் பின்னது
இருளும் ஆயின. அது போலவே, வறுமை பின் வந்தமையின், முன் வந்த
மிடி கேடு என்பதாயிற்று.