பக்கம் எண் :

முதற் காண்டம்254

                  சீமையோன் விடை தந்து போதல்

     கருவிளம், தேமா, கூவிளங்காய், கருவிளம், தேமா, கூவிளங்காய்
 
                     128
உரைத்தவி தங்கொ டாயமுறை யுவப்பின டந்த நாள் பலவும்
விரைத்தக வுண்ட வாகையனை விளித்தக லுந்த னூரிலுறத்
திரைத்தக வுண்ட வார்வமொடு திளைத்தரு ளுண்ட வாசியறை
புரைத்தணி வின்றி வாழுமுனி புயத்தைய ணிந்து கூறினனால்.
 
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும்
விரைத் தகவு உண்ட வாகையனை விளித்து, அகலும் தன்
                                         ஊரில் உற,
திரைத் தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து, அருள் உண்ட
                                         ஆசி அறை
புரைத் தணிவு இன்றி வாழும் முனி, புயத்தை அணிந்து,
                                         கூறினன் ஆல்.

     மேலே கூறிய விதமாய் ஆகிய திருமண முறையின் மகிழ்ச்சியில்
நாட்கள் பல கழிந்தன. அதன் பின், வாசனைச் சிறப்புக் கொண்ட
மலர்க்கொடியை உடையவனாகிய சூசையை அழைத்து, தெய்வ அருள்
கொண்ட நல்லாசியை அவனுக்குக் கூறியவனும் பாவத்தால் வரும் தாழ்வு
இன்றி வாழும் முனிவனுமாகிய சீமையோன் அவன் இரு புயங்களையும்
தழுவிக் கொண்டு, கடலளவு தகுதி கொண்ட ஆர்வத்தில் மூழ்கித்
திளைத்து, தூரத்தில் உள்ள தன் ஊரில் சென்று வாழுமாறு கூறினான் சூசையின் ஊர் நாசரெத்தை என அறிக,

     'ஆல்' அசை நிலை.

 
                 129
அளிப்பட வந்த வேவலுண ரளிப்பட விண்ட வாகைவள
னொளிப்பட மன்ற லாயவர முவப்பிலி ணங்க லாகுமுறை
வெளிப்பட வன்று வேணுமென விழுப்படை யன்பு லாவியுறு
களிப்பட நின்ற வீசனடி கருத்தில ணிந்து தாழுவனே.