பக்கம் எண் :

முதற் காண்டம்26

               20
மல்ல விள்ளலர் மலிந்த கான்றொறும்
புல்ல வன்பறா பொருது காரண
மில்ல தொல்லெனக் குறும்பு ளீந்தபோ
ரல்ல தில்லதோ ரமரந் நாட்டிலே
 
மல்ல விள் அலர் மலிந்த கான் தொறும்
புல்ல அன்பு அறா, பொருது காரணம்
இல்லது, ஒல் எனக் குறும்புள் ஈந்த போர்
அல்லது, இல்லது ஓர் அமர் அந்நாட்டிலே

     வளமாக விரிந்து மலர்கள் நிறைந்த வனம் தோறும் ஒரு போர்
நடக்கும். அது பொருந்துவதற்கு உரிய அன்பு அறாமலும் போர்
செய்வதற்கு உரிய காரணம் இல்லாமலும் காடைகள் ஒல்லென ஒலித்துத்
தமக்குள் செய்து கொள்ளும் அன்புப் போர். இப்போரே அல்லது வேறு
பகையால் நடைபெறும் போர் அந்நாட்டில் இல்லை.

     பொருது காரணம் - பொரு காரணம், பொருதல் - தொழிற் பெயர்.
பொரு - பகுதி. 'பொருது' என்பதையே பகுதியாக்கி, அதினின்று
வினைச்சொல் உருவங்கள் அமைத்தல் முனிவர் மரபு.
   
                21
தீயெ ழத்தகர் சினந்து தாக்குப
மீயெ ழத்துகள் விரைந்து பின்னுற
னோயெ ழப்பகை நுதலு மொன்னவர்
வாயெ ழச்செயும் வணக்க மானுமே
 
தீ எழத் தகர் சினந்து தாக்குப,
மீ எழத் துகள் விரைந்து பின் உறல்,
நோய் எழப் பகை நுதலும் ஒன்னலர்,
வாய் எழச் செயும் வணக்கம் மானுமே.

     தீப்பொறி பறக்க ஒன்றோடொன்று சினந்து தாக்குவனவாகிய இரண்டு
ஆட்டுக் கிடாய்கள், தூசி மேலே எழுமாறு விரைந்து பின் வாங்கும்
நிகழ்ச்சி,துன்பம் செய்யுமாறு பகைச் செயலை மனத்துட் கருதிய பகைவர்
பாயினின்று பிறக்கச் செய்யும் வணக்கச் சொல்லை ஒத்திருக்கும்.

     "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
     தாக்கற்குப் பேருந் தகைத்து" (468)