பக்கம் எண் :

முதற் காண்டம்260

     மரியாள் தம்மை விட்டுப் பிரிவதுபற்றிய வருத்தம் எவ்வளவு தான்
இருந்தபோதிலும், தம்மோடு இருந்தவள் என்ற இனவுணர்வு காரணமாக,
மணம் முடித்துச் செல்பவளை மகிழ்ச்சியோடு அனுப்பிவைக்க
வேண்டுமென்ற மரபுப்படி, அவ்வருத்தத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,
ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி அக் கன்னிமடத்து மகளிர்
மகிழ்ச்சி காட்டி அனுப்பிவைத்தனர்.
 
                     136
உடுக்குல முண்டு சூடினளு உருக் கொடு மன்று வாகையனு
மடுக்குநெ ருங்க யாருமுறை யணிக்குல மண்டு கோயிலுறீஇ
யெடுக்குந லங்கொ ணாயகனை யிரட்டியி றைஞ்ச லாயினபின்
வடுக்குல மொன்றி லாதமுனி மனத்திலு வந்து கூறுவனால்
 
உடுக் குலம் உண்டு சூடினளும், உருக் கொடு மன்று வாகையனும்,
அடுக்கு நெருங்க யாரும், முறை அணிக் குலம் மண்டு கோயில்
                                              உறீஇ,
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின்
வடுக் குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன் ஆல்:

     விண்மீன் கூட்டத்தை முடியாகக் கொண்டு சூடின மரியாளும், அழகு
கொண்டு மணமுள்ள மலர்க் கொடியை உடைய சூசையும், பிறர் யாவரும்
அடுக்காக நெருங்கி வர, அணி வகைகள் முறையாக மண்டிக் கிடக்கும்
கோவிலை அடைந்து, எடுப்பான நன்மைகளெல்லாம் கொண்டுள்ள
ஆண்டவனை ஒளிபடத் துதித்து வணங்கி முடிந்த பின், குற்றத்தின்
வகைகள் எதுவும் தன்னிடம் இல்லாத முனிவனாகிய சீமையோன் தன்
மனத்தில் மகிழ்ச்சி கொண்டு பின் வருமாறு கூறுவான்:

     'ஆல்' அசைறிலை.

                     137
கனத்திலி ழிந்து சாயவரைக் கரத்தில்வி ழுந்து பேரவரும்
வனத்தில்வ ளர்ந்து போகவயல் வயத்தில்மெ லிந்து பாயவலை
யினத்திலி ரிந்து பேருமில விளிப்பட வந்த வாரியெனத்
தனத்திலி ருந்த வாழ்வினிமை தவிர்க்கனி றைந்த ஞானமதே