பக்கம் எண் :

முதற் காண்டம்263

                     140
இசைப்பட வொன்றி யீரறமு மெவர்க்குமி லங்கு மாடியினர்
நசைப்பட நின்ற வீசனடி நயப்பில்வ ணங்க வீழுமுறை
சுசைப்பவன் முன்ற னீரடிக டுடைத்துவ ணங்க வேகனவில்
விசைப்படு திங்கள் மாலியொடு விழத்தகை கண்ட வாறெனவே.
 
இசைப் பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர்,
நசைப் பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை,
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே
                                            கனவில்,
விசைப் படு திங்கள் மாலியொடு விழத் தகை கண்ட ஆறு எனவே.

     இல்லறம் துறவறம் என்னும் இரண்டு அறங்களும் தம்முள் இசைவாக
ஒன்றுபட யாவர்க்கும் துலங்கக் காட்டும் கண்ணாடி போன்ற சூசையும்
மரியாளும், தம்மிடம் ஆசை பொருந்த நின்ற குருவின் அடியை
விருப்பத்தோடு வணங்க விழும் இத்தன்மை, முற்காலத்தில் சுசைப்பு என்னும்
அவன் கனவில் தன் இரண்டு அடிகளையும் தழுவி வணங்கவென்று
வானின்று விசையோடு மதி கதிரவனோடு வந்து விழுந் தன்மையாகக்
கண்டதுபோல் தோன்றும்.

     சுசைப்பு: இவன் பழங்காலத்து யோசேபு; யாக்கோபின் பன்னிரு
புதல்வரில் ஒருவன். ஞாயிறும் திங்களும் பதினொரு விண்மீன்களும் தன்னை
வணங்கியதாகக் கண்ட கனவை எடுத்துக் கூறி, தந்தையின் அதட்டலுக்கும்
உடன் பிறந்தாரின் பகைக்கும் ஆளானவன். பல தொல்லைகளுக்கு ஆளாகி,
இறுதியில் எசித்து நாட்டை அரசனின் அமைச்சனாக அமர்ந்து ஆண்டவன்.
இவனை 'ஆணரன்' என்ற பெயரால் முனிவர் குறித்து விரிவாகத் தரும்
செய்திகள் 20-வது, சித்திர கூடப் படலம், 55-119 காண்க.