பக்கம் எண் :

முதற் காண்டம்264

                      141
அணித்தக வெந்தை கூறவினி தளித்தக மன்ற லாதலொடும்
பிணித்தம னங்கள் வேறுமில பிரித்தவி ரண்டு தேகமிடை
கணித்தவி தங்கள் மாறுமுறை களித்துயி ரொன்று வாழவெனப்
பணித்தன ரங்கி யாருமறை பழிச்சல்க டந்த வோகையிலே.
 
"அணித் தக எந்தை கூற, இனிது அளித் தக மன்றல் ஆதலொடும்,
பிணித்த மனங்கள் வேறும் இல, பிரித்த இரண்டு தேகம் இடை
கணித்த விதங்கள் மாறும் முறை களித்து, உயிர் ஒன்று, வாழ!"
                                              எனப்
பணித்தனர், அங்கு யாரும் மறை பழிச்சல் கடந்த ஓகையிலே.
  
     அங்கு நின்ற யாவரும் வேத நெறியைப் பாராட்டிய அளவு கடந்த
மகிழ்ச்சியோடு, "எம் தந்தையாகிய ஆண்டவனே மலர்க்கோலின் மூலமாக
அழகுற எடுத்துக் கூறி, அவனது கருணைக்குத் தக்கவாறு திருமணம்
இனிதே நிறைவேறியதோடு, கட்டப்பட்ட இரு மனங்களும் என்றும்
வேறுபடுதல் இல்லாமல், கடவுள் பிரித்துப் படைத்த இரண்டு
உடல்களிடையே உயிர் ஒன்றேயாகி, இவ்வாறிருக்குமெனப் பிறர்
கணித்த விதங்களெல்லாம் மாறத் தக்க மேம்பட்ட முறையிலே இன்புற்று
வாழ்வீர்களாக!" என்று அன்புக் கட்டளையிட்டனர்.

 
                      142
மிகுத்தன ரங்கண் யாருமருள் விருப் பிலருந்தி யாசிகளை
வகுத்தன ரங்க ணாயதிரு மணத்தில்மி குந்த சீரமைதி
தொகுத்தன ரெங்கும் யாருமில துணைப்பட வொன்றி
                                         யேகணிகள்
பகுத்தன ரங்கு ஞானவொளி பரப்பிந டந்து போயினரே.
 
மிகுத்தனர் அங்கண்யாரும் அருள் விருப்பில் அருந்தி ஆசிகளை
வகுத்தனர். அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி
தொகுத்தனர் எங்கும் யாரும் இல, துணைப் பட ஒன்றி, ஏழு
                                         அணிகள்
பகுத்தனர், அங்கு ஞான ஒளி பரப்பி நடந்து போயினரே.