பக்கம் எண் :

முதற் காண்டம்266

     வழியில் நகர மக்கள், "வாருங்கள், வாருங்கள்!" என்று எட்டநின்றவர்
வரவேற்றும், "வேதத்தின் அழகு வடிவமாக வந்த மைந்தரே, எங்களை
விட்டு நீங்காமல் இங்கேயே தங்கி நில்லுங்கள், நில்லுங்கள்!" என்று
கிட்டநின்றவர் வேண்டியும், தம் உள்ளம் உண்ட இன்பம் மிகவே, தம்மைப்
போல் பிறர் யாவரும் வந்து அவ்வின்பத்தை அருந்த வருமாறு, "நீங்களும்
வாருங்கள், வாருங்கள்!" என்று அழைத்தும், அவ்வாறு எல்லோரும் வந்து
நெருங்கியதோடு, காட்சி கிட்டாத சிலர் முன்னும் பின்னுமாகத் தாவி வந்து
நெருக்கக் கண்டு, "விலகி நில்லுங்கள், நில்லுங்கள்!" என்று கடிந்து
கொள்ளவுமாக, முழக்கம் மேலோங்கி எழுந்த அந்நகரிடையே
அவ்விருவரும் நெடுநேரம் நின்று நின்று நகர்ந்து செல்வர்.
 
144
காவிவிண்ட மன்றலிதழ் காலுமின்ப மொன்றுமுரை
                     காலுகின்ற நன்றி யியலாற்
பூவிலின்பு மிழ்ந்தவுயிர் போகுதென்று நின்றநரர்
                  பூசைகொண்டு கொண்ட துதியின்,
னோவியம்பொ ருந்தவெறு வாயுடம்பு நின்றவுயி
                     ரோவுகின்று பின்று செலவே
கோவினம் பொருந்தினவர் கோளொளிர்ந்தி ரிந்தமுறை
                     கோசினின்ற கன்று பெயர்வார்.
 
 காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை
                    காலுகின்ற நன்றி இயலால்,
"பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது" என்று, நின்ற நரர்,
                    பூசை கொண்டு கொண்ட துதியின்,
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்ற உயிர் ஓவுகின்று
                    பின்று செலவே,
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிர்ந்து இரிந்த முறை
                    கோசின் நின்று அகன்று பெயர்வார்.

     ஆம்பலின் விரிந்த வாசனையுள்ள இதழ் பொழியும் தேன் போல்
இன்பம் பொருந்தும் சொற்களை அவ்விருவரும் நன்றியாகப் பொழிகின்ற
தன்மையால், கூடி நின்ற மக்கள், "இப் பூவுலகில் இன்பத்தைப் பொழிந்த
உயிர் நடந்து போகிறது." என்று வணக்கத்தோடு கூறிய துதியினிடையே,
சித்திரம் போல வெறுமையாய்த் தம் உடம்புகளை நிற்க விட்ட உயிர்கள்