பக்கம் எண் :

முதற் காண்டம்271

தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர
                    வரம் கொள் அங்கண் இருவர்
புக, மருங்கு எழுந்த மறை புக, நிறைந்து அடர்ந்த அருள் புக,
                    அறம் செறிந்து புகவே,
முகம் மலர்ந்து வந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர்
                    அனந்தம் உண்ட முறைகள்,
அகம் மலிந்து உணர்ந்த தமிழ்க் கலை வருந்துகின்ற தொடை
                    அளவின் நின்று அடங்க முறையோ?

     எல்லாப் பெருமையும் தன்னியல்பாக அடைந்துள்ள எம் தந்தையாகிய
ஆண்டவன் திருவடிகள் மனிதனாய் அவதரித்து வந்து அங்கு விளங்குவதற்கு
வழியாய் அமைய வரங் கொண்டுள்ள இருவரும் அங்கு வந்து புகுந்தமையால்,
அவர்கள் பக்கமாய் உயர்ந்த வேதமேவந்து புகவும் நிறைந்து திரண்ட தெய்வ
அருள் வந்து புகவும், புண்ணிய மெல்லாம் செறிந்து வந்து புகவும்,
வானவர்களும் முகம் மலர்ந்து வந்து குடிகளாய் அமைந்து தங்கிய அந்
நாசரெத்தை நகரம் அடைந்த முதிர்ந்த அளவற்ற நலங்களின் தன்மைகள்,
மனம் மகிழ்ந்து உணர்ந்த தமிழ்க் கலைகளெல்லாம் வருந்தி அமைக்கின்ற
பாக்களின் அளவில் நின்றும் அடங்கக் கூடியனவோ?
     

     தொடை, தொடைகளால் ஆகிய பாவுக்கு ஆகுபெயர்.

               சிறு மனையுட் பெருவாழ்வு

      -விளங்காய், கூவிளங்காய், - விளங்காய், கூவிளங்காய்
 
                  150
இற்றையினி தாயினபின் மற்றையவ ருந்தொடரக்
கற்றைமலி சோதிகருள் முற்றுமுகில் புக்கனைய
நிறத்தியனில் லாமையென வெறுத்தசிறி தோர்மனையுள்
ளறத்தினியல் மாண்புரிமை பெறத்தகவர் புக்குறைவார்.
 
இற்றை இனிது ஆயினபின், மற்றையவரும் தொடர,
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய,
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள்
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெறத் தகவர் புக்கு
                                       உறைவார்.