பக்கம் எண் :

முதற் காண்டம்272

     இவையெல்லாம் இனிதே நிகழ்ந்த பின் மற்றவர்களும் தம்மைத்
தொடர்ந்து வர, கதிர்த்திரள் மிகுந்த கதிரவன் கருமை முற்றிய மேகத்தினுள்
புகுந்தது போல, இவ்வுலகச் செல்வத்தின் இயல்பு நில்லாமையே என வறுத்த
தன்மையாய், அறத்தினால் வரும் மாண்பை உரிமையாய்ப் பெறத் தக்க
அவ்விருவரும் ஒரு சிறிய வீட்டில் புகுந்து தங்குவர்.
 
151
புக்கவிவ ரோடுபுடை மிக்கநலம் யாவுமுறீஇச் சொக்கவிழும் வானுலக ரொக்கநசை தூண்டவுறீஇ மீட்பதினி யெந்தையுற வேட்பதுசெய் வீடிதெனிற் கோட்பதில நூன்முறையின் கேட்பதினி வாழ்த்துளதோ.
 
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ,
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ,
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில்,
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து
                                    உளதோ?

        குடிபுகுந்த இவர்களோடு மிகுதியான நன்மைகள் யாவும் ஒரு பக்கம்
வந்து பொருந்தவும், அழகு விரியும் வானுலகத்தவர் இதன் நலத்தினால்
தூண்டப்பட்டு மறுபக்கம் வந்து பொருந்தவும், இனி எம் தந்தையாகிய
ஆண்டவனே பாவத்தினின்று மக்களை மீட்கும் பொருட்டு வந்துசேர
விருப்பங்கொள்ளும் வீடு இதுவென்றால், மாறுபாடு என்பதே இல்லாத நூல்
முறையில் அமைத்துக் கேட்பதற்குரிய வாழ்த்து இனி வேறு உளதோ?
 

                  152
மங்குலிடை மாலியென வங்குநுழை வாரெனினு
மெங்குமுளர் காணவுளம் பொங்குநசை பூத்துவரத்
தெள்ளரிய சேடர்மிசை யுள்ளமொடு மூரும்விழி
கள்ளவிழு கானலர்கள் விள்ளவளி வீழ்வதுபோல்.
 
மங்குல் இடை மாலி என அங்கு நுழைவார் எனினும்,
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர,
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி,
கள் அவிழு கான் அலர்கள் விள்ள அளி வீழ்வது போல்