பக்கம் எண் :

முதற் காண்டம்274

"இவ் உலகு உள் ஆய பொழுது, அவ் உலகம் ஆவல் உற,
செவ் ஒழுகு தேவன், அருள் வவ்வு இரு மைந்தர் இணை
சேர்த்து மணம் ஆக்கல், இவர் நீர்த்த மணம் நேரியதோ?
தோர்த்தது எனவோ?" என உள் ஆர்த்து அறைகுவார்
                                          சிலரே.

      "இவ்வுலகம் படைக்கப்பட்டபொழுது, செவ்வையான நீதியின்படி
ஒழுகும் ஆண்டவன், அவ்வானுலகமும் ஆவல் கொள்ளுமாறு, தெய்வ
அருள் கொண்ட இரு மானிடரை இணையாகச் சேர்த்துத் திருமணமாய்ச்
செய்தது, இவ்விருவர் கொண்ட நல்லியல்வு வாய்ந்த திருமணத்திற்கு
ஒப்பாகுவதோ? இதற்கு அது தோற்றது என்னலாமோ?" என்று சிலர்
தமக்குள் உரக்கப் பேசிக்கொள்வர்.

     மைந்தர் என ஆண்பாற் பன்மையாகவே வழங்கும் பெயரை
இருபாலும் சேர்ந்த பன்மைக்குரியதாக முனிவர் கையாண்டுள்ளார்.

 
155
துப்பொளிறு செஞ்சுடரோ டொப்பொளிறு மொண்மதிய
மெப்பொழுது மீதிரிய வப்பொழுதி லாண்டகையு
மிவ்வெழிலை யொக்குமென வவ்வெழிலை யாக்கினனோ
குவ்வெழில்கொல் வானெழிக்கொல் வவ்வலரி தென்றறைவார்.
 
"துப்பு ஒளிறு செஞ்சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம்
எப்பொழுதும் மீ தீரிய அப் பொழுதில் ஆண்டகையும்
இவ் எழிலை ஒக்கும் என அவ் எழிலை ஆக்கினனோ?
கு எழில் கொல்? வான் எழில் கொல்? வவ்வல் அரிது." என்று
                                       அறைவார்.

     "பவளம்போல் ஒளிரும் கதிரவனோடு அதற்கு ஒப்பாக ஒளிரும்
ஒளியுள்ள மதியையும் எப்பொழுதும் மேலே உலாவிக் கொண்டிருக்குமாறு
படைத்த அக்காலத்தில் ஆண்டவனும் இவ்விருவரின் அழகை ஒக்குமென்று
அந்த அழகைப் படைத்தானோ? இது இம்மண்ணுலகிற்கு உரிய அழகோ?
வானுலகிற்கு உரிய அழகோ? கண்டுபிடிப்பது அரிது." என்றும்
பேசிக்கொள்வர்.