பக்கம் எண் :

முதற் காண்டம்28

              24
உண்ட கன்றகன் றுள்ளி மேதிகள்
மண்ட வன்புறீஇ வழிந்த பாற்றிரள்
கொண்ட வன்னமே குடித்த லாவது
கண்ட தங்குள களவி தாமரோ
 
உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள்,
மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள்,
கொண்ட அன்னமே குடித்தல் ஆவது
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ

     எருமைகள் தம்மிடம் பால் குடித்து அகன்ற கன்றுகளை மீண்டும்
நினைந்து, அவற்றின் மீது பெருகிய அன்பு கொண்டு தம் மடியினின்று
பாலை வழிய விடும். அப்பாலைத் திரளாய்க் கூடிய அன்னங்கள்
குடித்தலாகிய நிகழ்ச்சி அங்குக் காணப்படுவதாகும். அங்கு உள்ள களவு
இது ஒன்றே ஆகும்.

    அரோ அசை நிலை. களவுக் குற்றம் அங்கு இல்லை என்பது
கருத்து.
    
               25
குயிலி னத்தொடு கொம்பி லார்கிளி
பயிலி னத்தொடு ஞிமிறும் பாடவே
துயிலி னத்தொடு விரித்த தோகைகொள்
மயிலி னத்தொடு மகளி ராடுமால்.
 
குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி
பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே,
துயில் இனத்தொடு விரித்த தோகை கொள்
மயில் இனத்தோடு மகளிர் ஆடும் ஆல்.

     மரக் கொம்புகளில் குயில் இனமும், பேச்சுப் பயிலும் நிறைந்த கிளி
இனமும், வண்டும் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும். மரத்தடியில் தம்
இனத்தோடு துயில் கொண்டிருந்த மயில்கள் இப் பாடலைக்கேட்டு விழித்துக்
கொண்டு, விரித்த தோகையோடு நடனம் ஆடும். அம் மயில் இனத்தோடு
மகளிரும் சேர்ந்து ஆடுவர்.

     'துயில்' என்பதனைத் 'துகில்' என்ற சொல்லின் மரூஉ எனக்
கொள்ளுதல் பொருந்தாது. வெளிப்படையாகப் பிறிதொரு பொருளுள்ள
சொல் வடிவமாக மரூஉ மொழி அமைவதில்லை. 'மகளிர் ஆடும்'
என்றவிடத்துச் செய்யுமென்முற்று பலர்பாலுக்கு வந்தமை வழுவமைதியாகக்
கொள்க. 'ஆல்' அசை நிலை.