பக்கம் எண் :

முதற் காண்டம்29

            26
காசி லம்புவ களித்த புள்ளினம்
வீசி லம்புவ மிடைந்த தும்பிகள்
பாசி லம்புவ சிலம்பப் பண்புகழ்
நாசி லம்புவ சிலம்பு நாடெலாம்.
 
கா சிலம்புவ களித்த புள் இனம்;
வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள்;
பா சிலம்புவ சிலம்பப் பண்; புகழ்
நா சிலம்புவ; சிலம்பும் நாடு எலாம்.

     களிப்புற்ற பறவை இனங்களின் ஆரவாரத்தால் சோலைகள் ஒலிக்கும்;
மொய்த்த வண்டுகளால் பூக்கள் ஒலிக்கும்; யாழ் ஒழிப்பதனால் பாடல்கள்
ஒலிக்கும்; புகழுரைகளால் நாவுகள் ஒலிக்கும்; இவ்வாறு நாடு முழுவதும்
ஒலிமயமாய்க் காணும்.
    
             27
முட்டி ரட்டின முரண்ட கர்பெடை
பெட்டி ரட்டின குயில்பி ளிர்ந்தமுத்
திட்டி ரட்டின கரும்பின் பீன்றகள்
விட்டி ரட்டின வீயி னங்களே.
 
முட்டு இரட்டின முரண் தகர். பெடை
பெட்டு இரட்டின குயில். பிளிர்ந்த முத்து
இட்டு இரட்டின கரும்பு. இன்பு ஈன்ற கள்
விட்டு இரட்டின வீ இனங்களே.

     மாறுபாடு கொண்ட ஆட்டுக் கிடாய்கள் ஒன்றோடொன்று முட்டிக்
கொள்வதனால் ஒலித்தன. குயில்கள் தம் பெட்டைகளை விரும்பிக்
கூவுதலால் ஒலித்தன. கரும்புகள் தம்மிடமிருந்து சிதறிய முத்துக்களைத்
தரையில் இடுதலால் ஒலித்தன. மலர் இனங்கள் இன்பத்தைப் பிறப்பித்த
தேனைப் பொழிதலால் ஒலித்தன.